அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக, கேரளாவில் தாமரை மலர்ந்தே தீரும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு தொடங்கியிருக்கிறது. உறுப்பினர் சேர்க்கை நிகழ்வை பிரதமர் மோடி வாரணாசியில் தொடங்கிவைத்தார். தமிழகத்தில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. உறுப்பினர் சேர்க்கைக்கான பணியைத் தொடங்கி வைத்து பேசும் போது , ‘அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே  தீரும்” என்று தெரிவித்தார்.
“ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது மத்திய அரசு மக்களுக்கு ஒரு ரூபாயை ஒதுக்கினால், மக்களுக்கு வெறும் 15 பைசா மட்டுமே கிடைத்தது. ஆனால், மோடி ஆட்சியில் மத்திய அரசு 100 ரூபாயை ஒதுக்கினால்,  டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் மக்களின் வங்கிக் கணக்கில் 100 ரூபாய் முழுமையாக கிடைத்துவிடுகிறது. இதையெல்லாம் ஏழை எளிய மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் பாஜகவையே மீண்டும் ஆட்சியில் உட்கார வைத்திருக்கிறார்கள்.
இதுபோல மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் கேரளாவிலும் தாமரை மலர்ந்தே தீரும். பிற கட்சிகளில் குடும்பங்கள்தான் அரசை ஆண்டுவருகின்றன. ஆனால், பாஜகவில் குடும்ப ஆட்சி இல்லை. நாட்டுக்காக உழைக்கும் தொண்டர்களின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் பாஜக மீது நம்பிக்கை வைத்து தமிழகத்தில் அதிக உறுப்பினர்கள் சேர்வார்கள் என நம்புகிறேன்.” என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
முன்னதாக முதல் உறுப்பினர் அட்டையை மாநில தலைவர் தமிழிசை பெற்றுக்கொள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வழங்கினார்.