தமிழகத்தில் 3 ஆண்டுகளில் பாஜக ஆட்சி அமையும் என்றும், முதல் நாளில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிதான் கைது செய்யப்படுவார் என பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுக- பாஜக மோதல்

தமிழகத்தில் திமுகவிற்கு கடும் சவால் கொடுத்து வரும் பாஜக, திமுக அரசு மீது தினமும் குற்றச்சாட்டை கூறி வருகிறது. முதலமைச்சரின் துபாய் பயணம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மின் வாரிய முறைகேடு, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து டெண்டரில் முறைகேடு என ஒன்றன் பின் ஒன்றாக பல புகார்களை தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக திமுகவும் பாஜகவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. தவறான குற்றச்சாட்டுக்களை கூறியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 620 கோடி ரூபாய் அளவிற்கு மான நஷ்ட ஈடு தொடுத்துள்ளது. இந்தநிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைத்ததற்கு காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்கள் மூலம் மக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். தினமும் 200 பேரை அழைத்துக்கொண்டு கே.எஸ்.அழகிரி சாலையில் சென்று பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

முதல் கைது செந்தில் பாலாஜி

பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு கொடுத்த டெண்டர்கள் குறித்த வெள்ளை அறிக்கையை திமுக அரசு வெளியிடுவார்களா என கேள்வி எழுப்பியவர், இன்னும் மூன்று வருடம் மட்டுமே திமுகவினர் தப்பிக்கலாம் ஆட்சி மாறும் போது முதல் நாள் முதல் கைது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிதான் என தெரிவித்தார். இப்போது தப்பிப்பார்கள் காரணம்,தமிழகத்தில் திமுக ஆட்சியாக இருப்பதால் போலீஸ், விஜிலன்ஸ் என அனைத்தும் ஆட்சியாளர்களின் கையில் இருக்கிறது என தெரிவித்தார். கூட்டணி இல்லாவிட்டால் ஓட்டு போடும் சிலிப் கூட கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைக்காது என கூறினார். அதிமுகவின் ஒற்றை தலைமை என்பது அதிமுகவின் உட்கட்சி விவகாரம், அதில் பாஜக எப்போதும் தலையிடுவதில்லை,தலையிடபோவதும் இல்லை என தெரிவித்தார்.