நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய முடிவை விரைவில் அறிவிக்கவுள்ளார். அவரது எதிர்பாராத முடிவு குறித்த தகவல் கசிந்து, அமித்ஷா உள்ளிட்டவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழக அரசியல் களத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ரஜினி அரசியலில் எப்போது குதிப்பார் என்பது கேள்விக்குறியாகி வருகிறது. ரஜினியின் அரசியல் வருகை என்பது, ஆரம்பத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், நாளடைவில் ‘புலி வருகிறது’ என்ற கதையாகிப் போனது.

ஒரு கட்டத்திற்கு பிறகு, இனி ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்று ரசிகர்கள் சலிப்படைந்த சூழலில்தான், கருணாநிதி, ஜெயலலிதாவின் மறைவு நிகழ்ந்தது. அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ரஜினி திட்டமிட்டார். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மீண்டும் குரல் எழுப்பத் தொடங்கினர்.

கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ல், அரசியலுக்கு வருவது உறுதி; 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்ற அறிவிப்பை ரஜினி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அத்துடன், ரஜினி மக்கள் மன்றத்தின் கட்டமைப்புகளை, கிராம அளவில் பலப்படுத்தும் பணியையும் அவர் மேற்கொண்டார். தனது அரசியல் ஆன்மீக அரசியல் என்று புதிய கோஷத்தை முன்வைத்தார். ரஜினியின் பெரும்பாலான கருத்துகள், பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்ததால், அந்த கட்சியில் சேருவார் அல்லது கூட்டணி வைப்பார் என்ற பேச்சும் நிலவியது. ஆனால், பாஜகவில் சேரும் திட்டமில்லை. தொடங்கினால் தனிக்கட்சி தான் என்ற முடிவில் அவர் உறுதியாக இருந்தார்.

இதற்கிடையே, ரஜினியின் உடல் நிலை பற்றிய வாட்ஸ் அப் தகவல் வைரலாக, அது உண்மைதான் என்று ரஜினி அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தனக்கு உடல் நலக்குறைபாடு உள்ளதால், அரசியலுக்கு வருவது பற்றி கலந்தாலோசித்து முடிவை அறிவிப்பேன் என்று ரஜினி தெரிவித்ததன் மூலம், அவரது அரசியல் பிரவேசம் இனி அவ்வளவுதான் என்பது உறுதியாகிவிட்டது. இந்த சூழலில் தான் கடந்த 21ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னைக்கு வந்தார். அப்போது ரஜினி- அமித்ஷா சந்திப்பு நடக்கும் என்று பேசப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக, அமித்ஷாவை ஆடிட்டர் குருமூர்த்தி நள்ளிரவில் சந்தித்து நீண்ட ஆலோசனை நடத்தினார்.

 அப்போது தமிழக அரசியல் நிலவரத்துடன் ரஜினியின் நிலை பற்றித்தான் பேசப்பட்டது. ஆடிட்டர் குருமூர்த்தி, அமித்ஷாவின் தூதராக சில வாரங்களுக்கு முன்பு ரஜினியை சந்தித்திருந்தார். அந்த சந்திப்பில், ரஜினியின் அரசியல் திட்டம் பற்றி குருமூர்த்தி பல விஷயங்களை கேட்டறிந்தார். அதைத்தான் அமித்ஷாவிடம் தற்போது தெரிவித்திருக்கிறார்.

 அதாவது, ரஜினிக்கு இன்னமும் அரசியல் ஆசை இருந்தாலும், அவரது உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. தனது நெருங்கிய நண்பரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்டவர்கள் கொரோனாவுக்கு பலியானது, ரஜினியின் குடும்பத்தாரை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது. எனவே, பொதுவாழ்க்கையே வேண்டாம். மன அமைதி கெடுக்கும் அரசியலும் வேண்டாம் என்று ரஜினிக்கு அவரது குடும்பத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

 எனவே, அரசியல் ஆசையை ரஜினி மூட்டைக் கட்டி வைத்துவிட்டார் என்ற விவரத்தை, அமித்ஷாவிடம் குருமூர்த்தி தெளிவாக்கி விட்டாராம். ரஜினியின் இந்த முடிவை எதிர்பார்க்காத அமித்ஷா, அந்த அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஆக வேண்டியதை பாருங்கள் என்று சொல்லிவிட்டாராம். எனினும், ரஜினி ரசிகர்களை பாஜகவுக்கு ஆதரவாக களமிறக்க வழிவகை இருக்கிறதா? என்று இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

ரஜினி தனது அரசியல் துறவறம் பற்றிய அறிவிப்பை வெளியிட திட்டமிட்டிருந்த நேரத்தில்தான், அமிஷாவின் தமிழகப் பயணம் அமைந்தது. இந்த நேரத்தில் அரசியல் ஓய்வு அறிவிப்பை வெளியிட வேண்டாம் என்று ரஜினி கருதினாராம். அமைச்சர் அமித் ஷா சென்னை வந்து சென்றுவிட்ட நிலையில், எந்த நேரத்திலும் ரஜினியிடம் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று, அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

ரஜினியின் அரசியல் நிலைப்பாடு அமித்ஷாவுக்கு அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினியை பகடைக் காயாக்கி ஆளும் அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்ற பாஜகவின் திட்டம் பலிக்காமல் போய்விட்டது அமித் ஷாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக, பாஜக வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள். சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய அமித் ஷா, பிரதமர் மோடியுடன் தமிழக நிலவரம் பற்றி ஆலோசித்துள்ளார். ரஜினியின் அரசியல் துறவர அறிவிப்பு வெளியானதும், பாஜகவின் அடுத்தகட்ட நகர்வு ஜெட் வேகத்தில் இருக்கும் என்றும் பேச்சு அடிபடுகிறது. இனி வரும் நாட்களில் தமிழக அரசியல் களம் சூடாக இருக்கும் பதில் சந்தேகமில்லை.