சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். ஆனால், முதல்வர் வேட்பாளரை கூட்டணிதான் முடிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். முதல்வர் வேட்பாளர் தொடர்பான கேள்வியை பாஜக தலைவர் எல்.முருகன் தவிர்த்தார். மேலும் பாஜக மேலிடம்தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்றும் பாஜக தரப்பில் கருத்துகள் வெளியாகின.


இந்நிலையில் மா நில கட்சியாக இருந்தாலும் சரி, தேசிய கட்சியாக இருந்தாலும் சரி, எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொள்வோர் மட்டுமே அதிமுக கூட்டணியில் இருக்க முடியும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பாஜகவுக்கு மறைமுகமாக அதிரடியாக பதில் அளித்தார். இதற்கிடையே முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்கிறோம் என்று பாஜக மாநில துணைத் தலைவர் விபி துரைசாமி இன்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார். முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகனே கருத்து தெரிவிக்காத நிலையில் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.