ஆம்புலன்ஸுக்கு வழி விடாத பாஜகவின் வேல் யாத்திரையால் கடும் போக்குவரத்து நெரிசலில் 108 வாகனம் அரை மணி நேரம் சிக்கித் தவித்தது. 

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், நவம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்தப்படும் என்று அறிவித்தார். எனினும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனாலும் தான் ஏற்கனவே அறிவித்த படி கடந்த 6-ம் தேதி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தடையை மீறி திருத்தணியில் வேல் யாத்திரை தொடங்கியதால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சென்னையில் தடையை மீறி நேற்று எல். முருகன் உள்ளிட்ட பாஜகவினர் பலரும் வேல் யாத்திரையை தொடங்க வாகனங்களில் சென்றதால், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. மேற்கொண்டு செல்ல முடியாததால், ஆம்புலன்ஸ் சைரன் சத்தத்தை எழுப்பியபடியே இருந்தது. ஆனாலும், அரை மணி நேரம் அங்கேயே நின்றது. போக்குவரத்து நெரிசல் சீரான பிறகு, ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்றது.

 

தமிழக அரசு தடை விதித்த நிலையில் வேல் யாத்திரையை தொடர்வது மட்டுமின்றி, உயிர் காக்கும் வாகனமான ஆம்புலன்ஸ்கே வழி விடாமல் யாத்திரை நடைபெற்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு இந்த யாத்திரைக்கு தடை விதித்துள்ள நிலையில், போக்குவரத்து காவலர்களும் வேல் யாத்திரைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் பொதுமக்கள் குற்றமசாட்டியுள்ளனர்.