அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நடந்த கல்வீச்சு சம்பவத்தில் பாஜக, விசிக, காவல்துறை என மொத்தம் 8 பேர் படுகாயமடைந்தனர்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நடந்த கல்வீச்சு சம்பவத்தில் பாஜக, விசிக, காவல்துறை என மொத்தம் 8 பேர் படுகாயமடைந்தனர். இதனால் சென்னை கோயம்பேட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

அண்ணல் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா என அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு பல நாடுகளில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த தினம் இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என அறிவித்ததுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சமத்துவ நாளுக்கான உறுதிமொழியையும் இன்று ஏற்றுக் கொண்டார். வழக்கம் போல அரசியல் கட்சிகள் சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் காலை 11 மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதற்கு அடுத்து பாஜகவினரும் அங்கு வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த திட்டமிட்டிருந்தனர். அதன்காக பாஜகவினர் சாலையோரங்களில் கொடி கம்பங்களை நட்டு வைத்திருந்தனர். பாஜகவினர் சிலைக்கு மாலை செலுத்த முற்பட்ட நிலையில், அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அங்கிருந்த பாஜக கொடியை பிடுங்கி எறிந்த விசிக வினர் பாஜகவின் கொடியை காலில் போட்டு மிதித்தனர்.

தொடர்ந்து ஆளுநர் தமிழக அரசின் தீர்மானத்தை காலம் தாழ்த்தி அவமதிப்பதாகவும் கூறி ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டனர். விடுதலை சிறுத்தைகளின் கொடியை அம்பேத்கர் சிலையில் வைத்து ஜெய் பீம் ஜெய் பீம் என முழங்கினார். சாலையோரத்தில் நடப்பட்டிருந்த பாஜக கொடி கம்பங்களை விடுதலை சிறுத்தை கட்சியினர் அங்கிருந்து அகற்றினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் கல்வீச்சு சம்பவமும் நடந்தது. அதில் விசிக பாஜக மற்றும் காவல்துறையினர் 2 பேர் உட்பட மொத்தம் 8 பேர் அதில் படுகாயமடைந்தனர். இதனால் கோயம்பேட்டில் பதற்றம் ஏற்பட்டது. சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இரண்டு தரப்பினரையும் கட்டுப்படுத்தினர். இதனால் பாஜகவினர் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்துத்துவ அமைப்புகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதை விடுதலை சிறுத்தைகள் எதிர்த்து வருகின்றனர். சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரச்சனையை ஏற்படுத்தும் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க தகுதியில்லை என விடுதலை சிறுத்தைகள் கூறிவருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கும் முன்னர் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், அம்பேத்கர் மணி மண்டபத்துக்கு மரியாதை செலுத்த வந்த போது விடுதலை சிறுத்தை கட்சியினரால் விரட்டி அடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.