bjp vck clash

கரூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடக்கும் அரங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

மெர்சல் திரைப்பட விவகாரத்தில், விஜயை மிரட்டி வளைத்துப் போட பாஜக முயற்சிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விஜயை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் வளைத்துப் போடுவது மிரட்டி நிலங்களை அபகரிப்பது எல்லாம் திருமாவளவனின் வேலை என விமர்சித்திருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். தமிழிசை சவுந்தரராஜனின் உருவபொம்மை எரிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு காவல்நிலையங்களில் தமிழிசை மீது புகார்கள் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், கரூரில் பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெறும் அரங்கம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைப் பாஜகவினர் கண்டித்தனர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் தொடங்கிய மோதல் கைகலப்பு வரை சென்றது.

பாஜக-விசிகவினரின் மோதலை தடுக்க போலீசார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். அப்போது சிலர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.