BJP Use Deepa Jayakumar for permanently blacked two leaf symbol
இந்தியாவின் எந்த மாநிலத்திலும், பாஜகவுக்கு எதிரான கட்சிகள் வலுவோடு இருக்க கூடாது என்பதே, கட்சி தலைமையின் திட்டம்.
அதற்காகவே, வழக்குகள், அதிரடி சோதனைகள், தந்தை-மகன் மோதல் என, நாடு முழுவதும் உள்ள வலுவான எதிர்க்கட்சிகள் அனைத்தும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன.

ஹரியானாவில் ஓம் பிரகாஷ் சவுதாலா, பீகாரில் லாலு என அந்த பட்டியல் வெகு நீளமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, ஜெயலலிதாவும், கருணாநிதியும் இருக்கும் வரை, அது சாத்தியம் இல்லை என்பதால், பாஜக கொஞ்சம் அடக்கியே வாசித்தது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவிட்டு ஆட்சியை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர பாஜக திட்டமிட்டது. ஆனால் கூவத்தூர் திட்டம் மூலம் அதை சசிகலா தரப்பு முறியடித்தது.
ஆனாலும், அணிகளுக்கு இடையேயான மோதலை காரணம் காட்டி, அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுவிட்டது.
அதே சமயம், இது திமுகவுக்கு சாதகமாகிவிட கூடாது என்பதற்காக, மீண்டும் அதிமுக அணிகளை இணைக்கும் முயற்சியில் டெல்லி ஈடுபட்டது.

ஆனால், சசிகலா குடும்பத்தை புறக்கணித்துவிட்டு, அதிமுகவை கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, மிகவும் கடினம் என்பதை தற்போது தெளிவாக உணர்ந்துள்ளது டெல்லி.
அத்துடன், தொண்டர்களில் பெரும்பாலானோர் தம் பக்கம் இருப்பதாக கூறும் பன்னீரால், குறைந்த பட்சம் எடப்பாடி ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்காவது, மேலும் ஏழெட்டு எம்.எல்.ஏ க்களை இழுக்க முடியாமல் போய்விட்டது.
இதனால், பன்னீரை நம்பி பெரிதாக பயன் இல்லை என்று நினைத்த டெல்லி மேலிடம், தீபாவையும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோர வைத்ததாக கூறப்படுகிறது.

சசிகலா தரப்பில் இருந்து 3 லட்சம் பிரமாண பத்திரங்கள், பன்னீர் தரப்பில் இருந்து இரண்டரை லட்சம் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தீபாவும் தன் பங்குக்கு 50 ஆயிரம் பிரமாண பத்திரங்களை, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த விவகாரம், சசிகலா அணி, பன்னீர் அணி ஆகிய இரு தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத தீபா, எப்படி இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோர முடியும்? என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால், இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். ஒரு வேளை, இரு அணிகளும் இணைந்து விட்டால், இரட்டை இலை சின்னத்தை ஒப்படைக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகிவிடும்.
அதை தடுப்பதற்காகவே மூன்றாவதாக தீபா களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், இரட்டை இலை சின்னம் இப்போதைக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என்றே டெல்லிக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

மறுபக்கம், எடப்பாடி, பன்னீர், தினகரன் ஆகிய அனைவருமே பாஜக கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டனர். இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த முடியாது என்பதால், கூட்டணியில் உள்ள பாஜகவின் தாமரை சின்னத்தில் அதிமுகவினரை போட்டியிட வைப்பதே டெல்லியின் திட்டம்.
அப்படியாவது தமிழகத்தில் தாமரையை மலர வைக்கலாம் என்பதே டெல்லி மேலிடத்தின் கணக்கு. அதற்காகவே, தீபாவுக்கு கொம்பு சீவப்பட்டுள்ளது.
பாஜகவின் இந்த திட்டத்தை வழக்கு மற்றும் ரெய்டுக்கு பயந்து தலைவர்கள், அதை ஏற்றுக்கொண்டாலும், அதிமுக தொண்டர்கள் அதை ஏற்பார்களா? என்பது சந்தேகம்தான்.
