மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகவும், 18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் தீர்ப்பு வந்த பின்னர், தற்போதுள்ள ஆட்சி அகற்றப்படும் என்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரனின் தொகுதிக்குட்பட்ட  தண்டையார்பேட்டையில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த பின்னர் முன்னாள் எம்எல்ஏ
வெற்றிவேல் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

டிடிவி தினகரன் ஆதரவாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெற்றிவேல், சென்னை, தண்டையார்பேட்டையில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இதன் பின்னர், அவர் செய்தியாளர்களிடையே பேசினார். 

அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, மோடி அரசாக செயல்பட்டு வருகிறது என்று கூறினார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் தீர்ப்பு வந்த பின்னர், தற்போதுள்ள ஆட்சி அகற்றப்படும் என்றார்.

மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வாரியத் துறை அதிகாரிகள் ஆர்.கே.நகரில் பொதுமக்களிட இருந்து பணம் திரட்டுகிறார்கள். இதற்கு மத்திய அமைச்சர்களும்
உடந்தையாக உள்ளனர். அவர்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியல் விவரத்தை விரைவில் வெளியிடுவேன் என்று கூறினார்.

ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. தினகரனின் தொகுதி என்பதால் அரசு வேண்டுமென்றே இந்த தொகுதியை புறக்கணிக்கிறது. இதற்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்றார். பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த பாஜக திட்டமிடுவதாகவும், பாஜகவின் வியூகம் தோல்வி அடையும் என்றும் வெற்றிவேல் கூறினார்.