தேனி

அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தை அகற்றிவிட்டு, மனு தர்மத்தின்படி சட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதே பாஜகவின் தந்திரம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் இரா.தமிழ்வாணனின் தந்தை சொ.ராமசாமி படத்திறப்பு விழா  மற்றும் "நாட்டை ஆள்வது அரசியலமைப்பு சட்டமா அல்லது மனுதர்மமா" என்ற தலைப்பில் பெரியகுளத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியது:

"அம்பேத்கர் இரவு பகலாக பாடுபட்டு உருவாக்கிய சட்டத்தை அகற்றிவிட்டு, மனுதர்மத்தை கொண்டு வர பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

மனு தர்மத்தில் அந்தணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய நான்கு பிரிவுகள் படி வேலைகள் உருவாக்கப்பட்டது. அதன்படி, சட்டத்தை உருவாக்குவதே பாஜகவின் தந்திரம்.

மனு தர்மம் இளம் வயது திருமணத்தை ஆதரிக்கிறது. பெண் கல்வியை எதிர்க்கிறது. உடன்கட்டை ஏறுதலை ஆதரிக்கிறது. இதைத் தான் பாஜக கொண்டுவர நினைக்கிறது. 

வி.பி.சிங் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஆனால், பாஜக மூத்த தலைவர் அத்வானி அதனை எதிர்த்து ரத யாத்திரை சென்றார். அப்போது, நாட்டின் பல்வேறு இடங்களில் கலவரம் ஏற்பட்டது.   

இதேபோல, தற்போது ராம ராஜ்யம் அமைப்போம் எனக் கூறி, ரத யாத்திரை நடத்தி வருகிறார்கள். 

இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் தாய் மதத்துக்கு திரும்ப வேண்டும். இந்தியா முழுவதும் இந்துக்களே இருக்க வேண்டும் எனக் கூறி வருகிறார்கள். 

ஜாதி பாகுபாடு இல்லாத மதம் இஸ்லாம் மட்டுமே" என்று அவர் கூறினார்.