பெங்களுரு சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என ஆர்.டி.ஐ. மூலம் சிறைத்துறையிடம் தகவல் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள சிறைத்துறை நிர்வாகம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆகிறார் என தெரிவித்துள்ளது. மேலும், சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை. ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும். அபராத தொகையை கட்டத் தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும் என தெரிவித்துள்ளது. நன்னடத்தை விதி, ஏற்கெனவே அனுபவித்த தண்டனை நாள்கள், விடுமுறை நாள்கள் என சில காரணங்கள் சொல்லப்பட்டு ஆகஸ்ட் மாதம் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா வெளியே வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டன. அவரது குடும்பத்தினரும் அதற்கான பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது தண்டனைக் காலம் முடிவடையும் பிப்ரவரியிலாவது அவர் வெளியே வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வழக்கமாக ஒரு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளியை காவல்துறையினர் வேறு ஒரு வழக்கை காரணம்காட்டி சிறையிலேயே கைது செய்ய முடியும். பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது சில முறைகேடுகள் நடந்துள்ளதாக ஒரு வழக்கு இருக்கிறது. அந்த வழக்கை காரணம் காட்டி சிறை நாள்கள் நீளலாம் என்றும் கூறப்படுகிறது.

கர்நாடக உள்துறைச் செயலாளராக ஐஏஎஸ் ரேங்கில் உள்ளவர்களைத் தான் வழக்கமாக பயன்படுத்துவார்கள். ஆனால் சமீபத்தில் ஐபிஎஸ் ரேங்கில் உள்ள ரூபா பணியமர்த்தப்பட்டார். இந்த ரூபா சிறைத் துறை டிஐஜியாக இருந்தபோது சசிகலா சிறையில் விதிமுறைகளை மீறிச் சிறப்பு சலுகைகளை அனுபவித்ததாக குற்றம் சாட்டினார். இந்த சிறப்பு சலுகைகளை பெற, பணம் கைமாறியதாகவும் கூறப்பட்டது. ரூபா உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அது சசிகலாவுக்கு ஆதரவாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. 

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு சசிகலாவிற்கு எதிராக அம்மாநில காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு செயலாளர் முத்து மாணிக்கமும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். இப்படி சில முட்டுக்கட்டைகளைப் போட்டு தேர்தல் முடியும் வரை அவர் வெளியே வராமால் இருந்தால் தப்பித்துக்கொள்ளலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். அதற்கான காய்நகர்த்தல்களையும் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

சசிகலாவை சிறைக்கு அனுப்பி எவ்வாறு ஒரு பெரிய அரசியல் நாடகத்தை பாஜக அரங்கேற்றியதோ, அதேபோல் நான்கு ஆண்டுகள் கழித்து அவர் வெளிவரும் சமயத்திலும் மற்றொரு அரசியல் நாடகத்தை பாஜக அரங்கேற்றலாம் என்கின்றனர். சசிகலா கையில் அதிமுக இருந்தபோது, ஓ.பன்னீர் செல்வத்தை தனியாக கொண்டுவந்து தாங்கள் நினைத்ததை எப்படி நடத்தினார்களோ, அதேபோல் இப்போது சசிகலாவை வைத்து ஓபிஎஸ், இபிஎஸை சரிகட்டி தாங்கள் நினைப்பதை நடத்திக் கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கூட்டணி விவகாரத்தில் அதிமுக முரண்டுபிடித்தால் இந்த அஸ்திரத்தை பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.

எனவே நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்தாலும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் சசிகலாவை மையமாகக் கொண்டே அரசியல் நகர்வுகள் அமையும் என அரசியல் விமர்சகர்கள் ஆருடம் கூறுகின்றனர். பாஜக ஏவப்போகும் அஸ்திரம் எடுபடுமா? அதிமுக மீளுமா? என்பதற்கான விடை இந்த தேர்தலில் தெளிவாகி விடும். ஒருவேளை அமமுக- அதிமுக இணைந்தால் நிச்சயம் திமுகவை திணறடிக்க முடியும் என்பதும் தீர்க்கமான உண்மை.