மேற்கு வங்க மாநிலம், மிட்னாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், திரிணமுல் காங்கிரசில் இருந்து விலகிய, அக்கட்சி மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் இணைந்தனர்.

 அவர்களை வரவேற்று பேசிய அமித்ஷா, ’’2021 சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க வெற்றி பெறும். தேர்தல் நெருங்கும் சமயத்தில் திரிணமுல் காங்கிரசில் மம்தா மட்டும் தனித்துவிடப்படுவார்’’ என அவர் தெரிவித்தார்.

மேற்கு வங்க சட்டசபைக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அங்கு ஆளும் திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ.க, இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. திரிணமுல் காங்கிரசில் இருந்து, மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சிலர் விலகி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான அமித்ஷா மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்றுள்ளார்.

கோல்கட்டா சென்ற அவர், ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் வழிபாடு நடத்தினார். பின்னர், சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், நிருபர்களிடம் பேசிய அவர் ’’ஆன்மீகத்தையும், நவீனத்துவத்தையும் இணைத்தவர் சுவாமி விவேகானந்தர். அவர் நமக்கு காட்டிய உன்னதமான வழியில் நடப்போம்’’ என அவர் தெரிவித்தார்.

திரிணமுல் காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுவேந்து அதிகாரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட்சியில் இருந்து விலகுவதாக, மம்தாவுக்கு கடிதம் அனுப்பினார். அவர் எம்.எல்.ஏ., பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார். திரிணமுல் காங்கிரஸில் இருந்து விலகிய அவருக்கு, இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மிட்னாப்பூரில் அமித்ஷா தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில், சுவேந்து அதிகாரி, தபாசி மொண்டல், அசோகி திண்டா, சுதிப் முகர்ஜி, சாய்காட் பஞ்சா, ஷில்பத்ரா தத்தா, திபாலி பிஸ்வாஸ், சுக்ரா முண்டா, ஷியாமபதா முகர்ஜி, பிஸ்வஜித் குண்டு, பனஸ்ரீ மைடி உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ.,க்கள் ஒரு எம்.பி., மற்றும் முன்னாள் எம்.பி., ஒருவர் பா.ஜ.,வில் இணைந்தனர்.