பாஜக – அதிமுக இடையே திரைமறைவில் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் பாஜகவிற்கு 5 தொகுதிகளை தூக்கிக் கொடுத்த கூட்டணியை உறுதி செய்தது அதிமுக. இதற்கு முன்பு கடந்த 2004 தேர்தலில் அதிமுக – பாஜக இடையே கூட்டணி அமைந்திருந்தது. அப்போது ஜெயலலிதா பாஜகவிற்கு 6 தொகுதிகளை கொடுத்திருந்தார். ஆனால் கடந்த 2019ல் எடப்பாடி – ஓபிஎஸ் பாஜகவிற்கு 5 தொகுதிகளை கொடுத்து கூட்டணி டீலிங்கை முடித்தனர். ஆனாலும் பாஜகவிற்கு 5 தொகுதிகளை கொடுக்கப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. பாஜகவும் 5 தொகுதிகளுகு ஒப்புக் கொண்டதும் கூட விவாதப் பொருள் ஆனது.

ஆனால் சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை டிசம்பர் மாதமே தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார். இதற்கு பாஜக, பாமக தரப்பில் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இரண்டு கட்சிகளும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு தொகுதிகளை கோரி வருகின்றன. பாமக 60 தொகுதிகளை கேட்கும் நிலையில் பாஜக 40 தொகுதிகளை கேட்டு வருகிறது. இரண்டு பேருக்கும் கேட்கும் தொகுதிகளை கொடுத்துவிட்டால் மீதம் 134 தொகுதிகள் மட்டுமே இருக்கும். அவற்றை எப்படி தேமுதிக, த.மா.கா உள்ளிட்ட சிறு கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்க முடியும்?

எனவே தான் திரைமறைவில் பாமக, பாஜகவுடன் அதிமுக தொடர்ந்து பேசி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது பாஜகவிற்கு 21 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக முன்வந்தது. காரணம் கடைசியாக பாஜக கடந்த 2001ம் ஆண்டு தான் பிரதான கட்சியான திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. அப்போது திமுக பாஜகவிற்கு 21 தொகுதிகளை வழங்கியது. இதன் பிறகு 2006 தொடங்கி 2016 வரை திமுக – அதிமுக கட்சிகள் பாஜகவை சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை. எனவே கடைசியாக திமுக கூட்டணியில் போட்டியிட்ட போது பெற்ற 21 தொகுதிகளை இந்த முறையும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அதிமுக தரப்பில் பாஜகவிடம் பேசப்பட்டது.

ஆனால் தற்போது தமிழகத்தில் தங்களின் வாக்கு வங்கி அதிகரித்துவிட்டதாகவும் கோவை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் தாங்கள் பலமாக இருப்பதாக பாஜக தரப்பில் அதிமுகவிற்கு பதில் அளிக்கப்பட்டது. எனவே 41 தொகுதிகள் தேவை என்று பாஜக தரப்பில் பேரம் பேசப்பட்டதாக கூறுகிறார்கள். இப்படியே பேச்சுவார்த்தை இழுபறியாகிக் கொண்டிருந்த நிலையில் தான் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க இயலாது என்பது போல் பாஜக மாநில தலைவர் முருகன் பேசி வந்தார். ஆனால் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவியோ, சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் கூடி முதலமைச்சரை தேர்வு செய்வார்கள் என்று குண்டை தூக்கி போட்டார்.

அப்படி என்றால் பாஜக மேலிடமே எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கவில்லையா? என்கிற கேள்வி எழுந்தது. ஆனால் திடீரென கடந்த திங்களன்று பேசிய சி.டி.ரவி தமிழகத்தில் பாஜகவை விட அதிமுக தான் பெரிய கட்சி. எனவே தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை அதிமுக தான் முடிவு செய்யும் என்று பின்வாங்கினார். கடந்த வாரம் வரை முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் பிடிவாதம் காட்டிய பாஜக ஒரே நாளில் இறங்கி வந்ததற்கு காரணம் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டது தான் என்கிறார்கள்.

41 தொகுதிகளை கேட்ட பாஜகவிற்கு 30 தொகுதிகளை கொடுக்க அதிமுக முன்வந்துள்ளதாக கூறுகிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜகவிற்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது. ஒரு நாடாளுமன்ற தொகுதி என்பது 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. அந்த கணக்கீட்டின் படி சட்டப்பேரவை தேர்தலில் 30 தொகுதிகளை பாஜகவிற்கு வழங்க அதிமுக முன்வந்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனாலும் கூட இது தொடர்பாக அதிகாரப்பூர்வ உடன்பாடு ஏற்பட நாள் ஆக வாய்ப்பு உள்ளது.