தமாகா கட்சி பாஜக இணைய போவதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மையில்லை என ஜி.கே.வாசன் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் வரும் 26-ம் தேதி நடக்கிறது. இதில் அதிமுக, திமுக சார்பில் தலா 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டது. ஏற்கனவே திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் பெரும் சிக்கலுக்கு இடையே அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில், தம்பிதுரை, கே.பி.முனுசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதிமுக மாநிலங்களவை சீட் ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தேமுதிகவுக்கு மறுக்கப்பட்டது. இதனையடுத்து, அதிமுகவுக்கு பாஜக கொடுத்த அழுத்ததின் காரணமாகவே ஜி.கே.வாசனுக்கு சீட் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகின. கூடிய விரைவில் பாகுவில் தமது கட்சியை இணைத்துவிடுவார் என்று கூறப்பட்டது. 

இந்நிலையில், இதுதொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேட்டியளிக்கையில்;- அதிமுக கூட்டணியில் கடந்த ஆண்டு தமாகா கடைசியாகத் தான் சேர்ந்தது. எனவே எங்களுக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட ஒரே ஒரு சீட் மட்டுமே ஒதுக்கியிருந்தனர். ஆனாலும், நாங்கள் அதிமுக-பாஜ கூட்டணி வெற்றிக்காக தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்தோம்.  

இந்நிலையில். மாநிலங்களவையில் தமாகாவுக்கு ஒரு இடம் தர வேண்டும் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வந்தோம். தேர்தல் தேதி அறிவித்ததும், மீண்டும் நாங்கள் அதிமுகவிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால். நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. எங்களது கோரிக்கையை ஏற்று அதிமுக மாநிலங்களவை எம்.பி. பதவியை ஒதுக்கியுள்ளது. இதற்காக மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  நான் மாநிலங்களவை எம்.பி. பதவியை பெறுவதற்கு டெல்லியில் உள்ள பாஜக உதவி செய்ததாக சிலர் சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லை. பாஜக தயவால் நான் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டேன் என்பது சரியல்ல.

சிலர் நான் பாஜவில் சேர்ந்து விடுவேன் என்று வதந்தியை பரப்பி வருகிறார்கள். தமிழக மக்களின் நலனுக்காக என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் மாநிலங்களவை எம்.பி.யாக செய்வேன். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக இருந்து தமிழக மக்களுக்கு நன்மைகளை பெற்று தருவேன் என்று கூறியுள்ளார்.