சென்னை ஆலப்பாக்கத்தில் நீட் தேர்விற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி நடத்தினர். அப்போது நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான், ’’நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா கூறிய கருத்து நியாயமானது. அவருக்கு தமிழன் மட்டுமல்லாமல் எல்லோரும் ஆதரவாக இருக்க வேண்டும். சூர்யாவை ஆதரித்த நீதிபதிகளுக்கு என்னுடைய நன்றி. அவரை எதிர்க்கும் நீதிபதிகள் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் உள்ள எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும் அதிகபட்சமாக வட இந்தியர்களே உள்ளனர். அவர்கள் படித்துவிட்டு தமிழக மக்களுக்கு எப்படி மருத்துவம் பார்ப்பார்கள்?  இந்தியாவிலேயே முதன்மையான மருத்துவக் கட்டமைப்பைக் கொண்ட மாநிலம் தமிழகம் தான். எங்களுக்கெல்லாம் மருத்துவக் கனவு வரக்கூடாதா? தமிழக மருத்துவர்களை இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகரிக்க வேண்டாம் எனத் தமிழக அரசு துணிந்து சொல்ல வேண்டும். உலகத்திற்கு வழிகாட்டியவன் தமிழன். எனவே இதிலும் தமிழன் தான் வழிகாட்டுவான்.

மாணவர்கள் இறந்து போராடுவதை விட இருந்து போராட வேண்டும். அவர்கள் இறந்தும் ஒன்றும் நடக்கவில்லை. உயிரைக் கொடுப்பதை மாணவர்கள் நிறுத்த வேண்டும். மாணவர்கள் இறப்புக்கு பிரதமர் மோடி வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. பாஜக மனித குலத்தின் எதிரி’’என அவர் தெரிவித்தார்.