Bjp tamilnadu state leader tamilisi warn tn goverment
முன்பு சுணங்கிப் போயிருந்த தமிழக பா.ஜ.க. கட்சி, தற்போதைய தாறுமாறு அரசியல் ஸ்டண்டுகளால் சற்றே சுறுசுறுப்படைந்து வேகம் காட்சி வருகிறது. அதிமுகவிற்குள் நிலவும் உள்கட்சிப் பிரச்சனைகள் தொடங்கி, தமிழக அரசின் செயல்பாடுகளை தனது பேட்டியால் சுள்ளென சுட்டு வருகிறார் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்.
கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்று நாகர்கோவில் சென்ற தமிழிசை சவுந்திரராஜன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தாலும் , தமிழக அரசுக்கு தமிழிசை விடுத்த மிரட்டல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மக்கள் விரோதப் போக்கை கடைபிடித்தால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது என்பதே தமிழிசையின் மிரட்டல் ஆகும்.

எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஆதரவு யாருக்கு என்பதை அக்கட்சியினர் தெரிவிக்க வேண்டும் என்று கூறிய தமிழிசை, லஞ்சம், ஊழலுக்கு எதிராக எடப்பாடி அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதோடு நிற்காமல் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினையும் தமிழிசை வம்புக்கு இழுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் முறையாகச் செயல்படவில்லை என்று குற்றஞ்சாட்டிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடவே பா.ஜ.க. விரும்புவதாகக் கூறினார்.
