குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ராகுல் காந்திக்கு எதுவும் தெரியாது, குடியுரிமை திருத்தச் சட்டம்  தொடர்பாக 10 வரிகளை பேசுமாறு ராகுலுக்கு நான் சவால் விடுக்கிறேன் என்று பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. அக்கட்சி சார்பாக போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து சிஏஏ குறித்தும் பாஜக அரசு மீதும் விமர்சனங்களை வைத்துவருகிறார். சில தினங்களுக்கு முன்பு, சிஏஏ தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்தது. ராகுல் காந்தி அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் நிலையில், சிஏஏ என்ன பிரச்னை உள்ளது என்பது பற்றி ராகுல் தெரிவிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் அமித் ஷாவின் கருத்தை பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டாவும் எதிரொலித்தார். ஆனால். ஒரு படி மேலே சென்று சிஏஏ-யில் உள்ள பிரச்னை உள்ளது என்பது பற்றி 2 வரிகளையாவது ராகுல் தெரிவிக்க வேண்டும் என்று நட்டா தெரிவித்துள்ளார்.

 
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ராகுல் காந்திக்கு எதுவும் தெரியாது, குடியுரிமை திருத்தச் சட்டம்  தொடர்பாக 10 வரிகளை பேசுமாறு ராகுலுக்கு நான் சவால் விடுக்கிறேன்.  சிஏஏ-வில் உள்ள பிரச்னைகள் குறித்து இரண்டு வரிகளையாவது அவர் சொல்ல வேண்டும். அவர் பெரிய இயக்கத்துக்கு தலைமை தாங்கிவருகிறார். ஆனால், நாட்டை தவறாக அவர் வழி நடத்தக் கூடாது” என்று தெரிவித்தார்.