அமலாக்கத்துறை விசாரணையில் பீதியில் உள்ள ஒரு வட மாவட்ட எம்பி மற்றும் வழக்கம் போல் புதிய வாரிசின் அரசியல் எழுச்சியால் ஓரம்கட்டப்பட்டுள்ள தென் மாவட்ட எம்எல்ஏ ஒருவரும் பாஜக மேலிடத்துடன் தொடர்பில் இருப்பது திமுக தலைமையை கலகலக்க வைத்துள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நிழலாகவும், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளராகவும் இருந்த எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் ஐக்கியமாவர் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு வரை கு.க.செல்வமே நம்பியிருக்கமாட்டார். தற்போது எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக சட்டப்பேரவையில் பாஜகவின் குரலாக கு.க.செல்வம் செயல்பட தயாராகி வருகிறார். இது ஸ்டாலினுக்கு மட்டும் இல்லை திமுகவிற்கும் மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து ஸ்டாலின் மீண்டும் வருவதற்குள் அடுத்தடுத்து அதிர்வலைகளை ஏற்படுத்த பாஜக மேலிடம் தயாராகி வருகிறது.

கு.க.செல்வம் பாஜகவுடன் இணைவதற்கு முன்பிருந்தே வட மாவட்ட எம்பி ஒருவர் பாஜக மேலிடத்துடன் தொடர்பில் இருக்கிறார். வட மாவட்டத்தில் திமுகவின் கஜானாவாக பார்க்கப்படுபவர் இந்த எம்பி. இதனாலேயே அடுத்தடுத்து அமலாக்கத்துறையால் பல்வேறு பிரச்சனைகளை இந்த எம்பி சந்தித்து வருகிறார். அண்மையில் கூட நம் அண்டை நாட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தொடர்பான சர்ச்சையில் இந்த எம்பி சிக்கினார். இது தொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை தீவிரமானால் சிறை செல்வது தவிர்க்க முடியாதது என்கிறார்கள். எனவே அந்த எம்பி திமுக தலைமையின் உதவியை இந்த விஷயத்தில் நாடியதாக சொல்கிறார்கள்.

ஆனால் திமுக தலைமை பாஜக மேலிடத்துடன் கடும் மோதல் போக்கை கடை பிடித்து வருகிறது. எனவே அந்த எம்பிக்கு கட்சித் தலைமை மூலமாக உதவி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. கலைஞர் ஆட்சியில் இருக்கும் போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் பாஜக தலைமையுடன் சில விஷயங்களில் அனுசரித்து செல்லும் வழக்கம் கொண்டவர். இதன் மூலம் நிர்வாகிகளுக்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் அதனை தீர்த்து வைக்கும் லாபி கலைஞரிடம் உண்டு. ஆனால் ஸ்டாலின் தரப்பிடம் அப்படி ஒரு லாபி இல்லை என்கிறார்கள். எனவே பிரச்சனையை சமாளிக்க வேண்டும் என்றால் திமுகவுடன் தொடர்பை துண்டிப்பதை தவிர வேறு வழியில்லை என்று அந்த எம்பி கருதுவதாக சொல்கிறார்கள்.

இதே போல் தென் மாவட்டத்தில் சொந்த செல்வாக்கு உடைய எம்எல்ஏ ஒருவர் உள்ளார். இவர் திமுகவில் இருந்தாலும் சரி அதிமுகவில் இருந்தாலும் சரி அந்த தொகுதிக்கு எம்எல்ஏ இவர் தான். கலைஞர் இருக்கும் போதே ஸ்டாலினால் ஓரம்கட்டப்பட்ட இந்த எம்எல்ஏ பிறகு ஸ்டாலினே நேரில் அழைத்து பேசியதால் சமாதானம் ஆனார். ஆனால் அந்த எம்எல்ஏ கனிமொழிக்கு மிகவும் நெருக்கமாக தன்னை காட்டிக் கொள்கிறார். இது கட்சியின் புதிய அதிகார மையமான உதயநிதி தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே திமுகவில் தனக்கு எதிர்காலம் இருக்காது என்று அந்த எம்எல்ஏ கருதுவதாக சொல்கிறார்கள். மேலும் அதிமுகவிற்கு சென்றாலும் கூட அரசியல் எதிர்காலம் என்ன ஆகும் என்கிற கவலை அவருக்கு இருக்கிறது. மேலும் அந்த எம்எல்ஏ மட்டும் அல்லாமல் அவரது உறவினர்கள் மீதும் சொத்து குவிப்பு வழக்கு உள்ளது. இதனால் பாஜகவா? அல்லது அதிமுகவா? எந்த கட்சியில் சேர்ந்தால் தனக்கு உதவியாக இருக்கும் என்று அவர் சில நாட்களாகவே சிந்தித்து வருவதாக சொல்கிறார்கள். ஆனால் கட்சியில் உதயநிதியால் தனக்கு பிரச்சனை வரும் என்று கருதம் அந்த எம்எல்ஏ கு.க.செல்வம் பாதையை பின்பற்றி திமுகவிற்கு எரிச்சலை ஏற்படுத்த விலைவில் பாஜக தலைவர் நட்டாவை சந்திக்கலாம் என்கிறார்கள்.