மகாராஷ்டிராவில் தொகுதிகளை அள்ளலாம் என நினைத்திருந்த பாஜக - சிவசேனா கூட்டணிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளார் எம்என்எஸ் எனப்படும் மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே.
உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்து நாட்டின் அதிக மக்களவை தொகுதிகள் உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. இங்கே 48 தொகுதிகள் உள்ளன. மகாராஷ்டிராவில் மூன்று கட்ட தேர்தல் முடிந்தவிட்டது. இறுதிகட்ட தேர்தல் 29-ம் தேதி  நடைபெற உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் சிவசேனா, பாஜக, எம்.என்.எஸ். ஆகிய கட்சிகள் ஓரணியில் இடம்பெற்றிருந்தன. எம்.என்.எஸ். தலைவர் ராஜ் தாக்கரேயின் பிரசாரம் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு பெரும் உதவியாக இருந்தது.


தேர்தலுக்கு பிறகு ராஜ் தாக்கரேவுக்கு, பாஜக, சிவசேனா உரிய மரியாதை தராமல் போனதால், கூட்டணியிலிருந்து விலகினார். பாஜக கூட்டணியிலிருந்து தள்ளிப்போன சிவசேனாவும் பாஜகவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் குடைச்சல் கொடுத்துவந்தது. ஆனா, இந்த மக்களவைத் தேர்தலில் வெல்லும் வகையில் இந்த இரு கட்சிகளும் மீண்டும் அணி சேர்ந்துள்ளன. இதையடுத்து இந்தத் தேர்தலில், எம்.என்.எஸ். கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.


அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு எதிராக தீவிர பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார்.   ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, ஸ்டார்ட் அப் இந்தியா உட்பட பல திட்டங்களை அவர் விமர்சனம் செய்துவருகிறார். ஒவ்வோர் இடத்திலும் ராஜ் தாக்கரேவின் பேச்சுக்கு, மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. மேலும் அவர் பேசும் இடங்களில் எல்லாம் மக்கள் வெள்ளமென கூடுகிறார்கள். இதனால், பாஜக - சிவசேனா கூட்டணி தங்களுக்கு பின்னடைவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 
கடந்த காலங்களில் ராஜ் தாக்கரே தனித்து போட்டி சிவசேனா - பாஜக கூட்டணிக்கு சிம்மசொப்பனமாக இருந்திருக்கிறார். இந்த முறை அப்படி எதுவும் ஆகிவிடுமோ என்ற கலக்கத்தில் பாஜக-சிவசேனா கட்சிகள் உள்ளன.