ஒட்டுமொத்த தமிழர்களின் வெறுப்பையும் ஒரேடியாய் சம்பாதித்துவிட்டார் மோடி. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் கொடுத்த கெடுவின் கடைசி நாளான இன்றும் கூட மனமிரங்கவில்லை மத்திய அரசு.

விளைவு தமிழ் மண்ணில் பி.ஜே.பி.யை லெட்டர் பேடு கட்சிகளை விட மிக மோசமான நிலைக்கு தள்ளி தடமின்று அழிப்பது எனும் உறுதியை எடுத்திருக்கிறது உணர்வாளர்கள் அடங்கிய மிகப்பெரும் கூட்டம்.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான  ஜல்லிக்கட்டுக்கு எதிராக மோடி அரசு ‘தடை’ கயிற்றை காட்டியபோது, தமிழக இளைஞர்கள் போராட்ட வடிவில் ஒருங்கிணைந்து முட்டி மோதி அதனை தகர்த்தனர். அதன் பின் தமிழகத்தில் எந்த பிரச்னையானாலும் இளைஞர் எழுச்சி ஏற்பட முயல்வதும், அதற்கு ‘கூட்டம் கூடினால் கைது செய்வோம்!’ என்று காவல்துறை மிரட்டல் விடுப்பதும் வழக்கமாகி இருக்கிறது.

இந்நிலையில் இன்று தமிழகத்தின் தலையாய பிரச்னையாகிய காவிரி ஆற்றில் நம் மாநிலத்துக்கான நியாயமான பங்கீடை உறுதி செய்யும் ’காவிரி மேலாண்மை வாரியம்’ அமைக்க கொடுக்கப்பட்டுள்ள அவகாச நாட்களின் இறுதி நாள். இன்று பிற்பகல் வரையிலும் தமிழகத்துக்கு சாதகமான ஒரு வார்த்தையை! வேண்டாம், சிறு கண்ணசைவை கூட காட்டிடவில்லை மத்திய அரசு. மாலை 6 மணியோடு கெடு முடிகிறது. இத்தனை நாட்கள் அமைக்காத வாரியம், இன்னும் இரண்டு மணி நேரத்துக்குள் எதையும் செய்திட வாய்ப்பே இல்லை! என்பது பொதுவான கருத்து.

டெல்லி ஜந்தர்மந்தரில் பல மாதங்களாக போராடிய அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகளை பிரதமர் ஏறிட்டும் பார்க்கவில்லை. இந்நிலையில் காவிரி பிரச்னைக்காக இன்று அதே இடத்தில் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் போராடினார்கள். அவர்களை கைது செய்து கொண்டு போயிவிட்டது டெல்லி போலீஸ்.

இந்நிலையில் காவிரியில் தமிழகத்தை அடியோடு ஏமாற்றிவிட்ட மோடி அரசுக்கு அவர்களின் ரூட்டிலேயே சைலண்டாக செக் வைக்கும் முடிவை எடுத்துள்ளனர் இளைஞர் கூட்டமைப்பினர். ‘ஆவேசமாக களமிறங்கி போராடினால், மோடியின் கைபொம்மையான தமிழக அரசு நம்மை கைது செய்து முடக்கிவிடும். எனவே மோடி போல் சலனமே இல்லாமல் இருந்து, உள்ளடி வேலை செய்து பி.ஜே.பி.யை உருவின்றி அழிப்போம்.’ என்று முடிவு செய்துள்ளனர்.

கிட்டத்தட்ட கடந்த இரண்டு வாரங்களாக இந்த திட்டமிடுதல் நடந்திருக்கிறது. தமிழகம் முழுக்க மற்றும் தமிழகம் தாண்டி பல மாநிலங்களில் இருக்கின்ற தமிழ் இளைஞர்கள் மற்றும் உணர்வாளர்களை சப்தமில்லாமல் ஒருங்கிணைத்திருக்கிறார்கள். எந்த சூழலிலும் தமிழக உளவுத்துறை போலீஸுக்கு இந்த தகவல் போய்விட கூடாது என்பதால் இணையதளத்தை இதற்கு பயன்படுத்தாமல் இருந்திருக்கிறார்கள்.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தின் கடைசி நாளான இன்றும், மோடி அலட்சியம் காட்டுவதை கண்டு பொங்கிய சில இளைஞர்கள் சோஷியல் மீடியாவில் உணர்ச்சிவசப்பட்டு சில பதிவுகளை வெளியிட்டுவிட்டனர். இவை உளவுத்துறையின் கண்களில் விழுந்துவிட்டது. அவர்கள் ஸ்மெல் செய்ட வகையில் ‘களப்புலிகள்’ என்று இந்த பிராஜெக்டுக்கு பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்.

முதற்கட்ட தகவலின் படி...மெஜாரிட்டி இழந்துவிட்ட அ.தி.மு.க. அரசை தன் அதிகாரத்தால் ஓட வைப்பது, டெல்லியில் போராடிய விவசாயிகளை அலட்சியம் செய்தது, இதற்கெல்லாம் மேலாக காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடும் விஷயத்தில் கர்நாடகாவுக்கு சப்போர்ட் செய்தது! ஆகிய அநீதிகளை செய்த மோடிக்கு மிக சரியான பாடத்தை தமிழகத்தில் கொடுப்பதே இவர்களின் இலக்கு.

அதன்படி இப்போதிருந்தே பி.ஜே.பி.க்கு எதிரான பிரச்சாரத்தை தமிழகத்தில் வீடு வீடாக துவக்க போகிறதாம் இந்த டீம். குறிப்பாக இளைஞர்களின் ஓட்டுக்களில் ஒன்று கூட மோடிக்கு விழக்கூடாது என்பதில் குறியாய் இருந்து செயல்பட போகிறார்கள்! என்றே தகவல்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலெல்லாம் கிடக்கட்டும், உள்ளாட்சி தேர்தல் நடந்தால் கூட ஒரு கவுன்சிலர் சீட் கூட பி.ஜே.பி.க்கோ அல்லது அவர்களுடன் கூட்டு வைக்கும் கட்சிக்கோ கிடைக்க விடமாட்டோம்! என்று சத்தியமே செய்திருக்கிறார்கள் களப்புலிகள்.