புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவசமாக ரயில் பயணம் வழங்க முடியாவிட்டால் பிரதமர் நிதி எதற்காக இருக்கிறது என  பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் எம்பியுமான சுப்ரமணியசாமி கேள்வி எழுப்பியுள்ளார் . கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது , நாட்டில்  வைரஸை கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது,  இந்நிலையில் ஊரடங்கு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருவதால் லட்சக்கணக்கான ஏழை எளிய நடுத்தர விளிம்புநிலை மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர் .  குறிப்பாக ஊரடங்கால் பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் ,  வறுமை காரணமாக வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஆங்காங்கே முடங்கி உள்ளனர் . 

இந்நிலையில் எந்த  வேலையும் இன்றி ,  வருமானமும் இன்றி அன்றாட உணவுக்கே அவர்கள் திண்டாடி வரும் நிலையில் ,   வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள அத் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு  நடை பயணமாகவே திரும்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . இதனால் பலர் மோசமான ஆபத்தில் சிக்குவதும்  அவர்கள் உயிரிழக்கும் அவல நிலையும் ஏற்பட்டு வருகிறது.  இதனால்,   உடனே வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு திரும்ப மத்திய அரசு ரயில் இயக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தன ,  இந்நிலையில் தொழிலாளர்களுக்கு இலவசமாக ரயில் இயக்கப்படும் என அறிவித்த மத்திய அரசு தற்போது அவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இதை மேற்கோள் காட்டியுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள்,  புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரயில் பயணம் வழங்க முடியாவிட்டால் பிரதமர் நிவாரண நிதி எதற்கு இருக்கிறது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்,  குறிப்பாக  கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் உத்திர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் ,  காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா உள்ளிட்டோரும் கேள்வி எழுப்பியுள்ளனர் .  தற்போது இந்த வரிசையில் பாஜக தலைவரும் எம்பியுமான சுப்பிரமணிய சாமியும் இணைந்துள்ளார் ,  வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை இலவசமாக இந்திய அரசு அழைத்து வந்தது ஆனால் இந்தியாவிற்குள் இருக்கும் தொழிலாளர்களுக்காக இரயில்வே இலவசமாக இயக்க  மறுக்கிறது என்றால்,  பிரதமர் நிவாரண நிதிக்கு எதற்காக உதவி செய்ய வேண்டும்.? என்று சுப்பிரமணியசாமி கேட்டுள்ளார்,  பசி பட்டினியால் வாடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் இருந்து இவ்வளவு அதிகமாக கட்டணத்தை வசிக்கும் இந்திய அரசின் செயல் மிகவும் மோசமானது என்று அவர் விமர்சித்துள்ளார்.