பீகாரில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆன்லைன் மூலம் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் நவம்பர் 12-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். தேர்தல் அட்டவணைப்படி அக்டோபர்,  நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், திட்டமிட்டப்படி தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், பீகாரில் பாஜக தேர்தல் பிரசார பணியைத் தொடர்ந்து முடுக்கிவிட்டுவருகிறது. எனவே, கொரோனா பீதி இருந்தாலும் பீகாரில் தேர்தல் நடத்தப்படுவது உறுதியாகிவருகிறது.ஏற்கனவே பீகார் மாநில மேலிடப் பொறுப்பாளர் கூறுகையில், “பீகாரில் தேர்தல் பிரசார கூட்டங்களையோ, பேரணிகளையோ நடத்த மாட்டோம். அதற்குப் பதிலாக தொழிற்நுட்பங்களைப் பயன்படுத்துவோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பீகாரில் ஆன்லைன் மூலம் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டது. அதன்படி அக்கட்சியின் மூத்தத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பங்கேற்ற ஆன்லைன் தேர்தல் பிரசாரத்தை பாஜக தொடங்கியுள்ளது. அவருடைய பேச்சை ஆன்லைன் மூலம் பீகார் மக்கள் கேட்க மாநில பாஜக ஏற்பாடு செய்திருந்தது. 


ஆன்லைன் பிரசார கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், “கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவின் நடவடிக்கையை, உலகமே வியந்து பாராட்டியது. கொரோனா போராளிகளின் கடும் முயற்சியால் இன்று நாமெல்லாம் நலமாக இருக்கிறோம். மக்கள் ஊரடங்கை நாடு முழுவதும் அறிவித்து பிரதமர் மோடி மதிப்பை பெற்றார். ஊரடங்கால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு ஏழை மக்களுக்கானது. 'ஒரே நாடு, ஒரு ரேஷன் கார்டு' திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. பீகார் முதல்வராக லாலு இருந்த போது, மாநிலத்தின் வளர்ச்சி 3.9 சதவீதமாக இருந்தது. நிதிஷ் ஆட்சியில் இது 11.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. பீகாரில் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைப்போம்” என்று அமித்ஷா பேசினார்.


அமித்ஷாவின் இந்த ஆன்லைன் பிரசாரத்துக்கு எதிராக ராஷ்ட்ரீய ஜனதாதளம் பாத்திரங்களை தட்டி ஒலியெழுப்பும் போராட்டத்தை பீகார் முழுவதும் நடத்தியது.