அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளாராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். ஆனால், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக தலைவர்கள், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றதாகத் தெரியவில்லை. முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமைதான் அறிவிக்கும்; அமித்ஷாதான் முடிவு செய்வார் என்றெல்லாம் தமிழக பாஜக தலைவர்கள் பேசிவருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்காதவர்கள் கூட்டணியை விட்டு வெளியே செல்லலாம் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி வெளிப்படையாக கூறியபோதும், பாஜகவினரின் பேச்சில் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்ற புதிய சொல்லாடலை தமிழக பாஜகவினர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ‘அடுத்த ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்’ என்று தெரிவித்தார். அக்கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் கே.டி. ராகவனும், ‘தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்’ என்றே நேற்று பேட்டி அளித்தார். 
அகில இந்திய அளவில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்பட்டாலும், அந்தக் கூட்டணியில் அதிமுக இடம் பெற்றிருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில்தான் கூட்டணி செயல்படுகிறது. அந்தக் கூட்டணியில்தான் பாஜக உள்ளது. அப்படிப் பார்க்கும்போது, ‘அதிமுக ஆட்சி அமைக்கும், அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி அமைப்போம்’ என்று பாஜகவினர் பேசுவதில் தவறில்லை. மாறாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி என்று பாஜகவினர் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அதிமுக பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், இவ்வாறு பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஏற்கனவே வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி என்றும் தமிழக பாஜகவினர் பேசினார்கள். தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி என்று பாஜகவினர் சொல்வதன் மூலம், கூட்டணிக்கு பாஜக தலைமை என்பதை மறைமுகமாக உணர்த்தத் தொடங்கியிருப்பதாகவே பார்க்கப்படுகிறது. அதே வேளையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவினரின் இந்தப் பேச்சுகளை அதிமுகவினர் எளிதாக கடந்து செல்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.