கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது. இந்தநிலையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் விழுந்தன.

இந்தநிலையில் புதிய அரசு அமைக்கும் பணியில் கர்நாடக பாஜக  தலைவர்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இதையடுத்து இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தில் எடியூரப்பா பாஜக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதைத் தொடர்ந்து ஆளுநரை சந்தித்து எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் எடியூரப்பா ஆட்சி அமைப்பதில் சிக்கல் இருப்பதால் அவர் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.  ஏனென்றால் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு காரணமான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. அவை சபாநாயகரின் பரிசீலனையில் உள்ளது. அதனால் அந்த 15 பேரும் இன்னும் எம்.எல்.ஏ.க்களாகவே உள்ளனர்.

இந்த நிலையில் சபையின் பலம் 225 ஆக உள்ளது. அதனால் சில சிக்கல் ஏற்படும் நிலை இருப்பதாகவும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் முடிவு எடுக்கும் வரை ஆட்சி அமைக்க அவசரப்பட வேண்டாம் என்று பாஜக மேலிட தலைவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக பேட்டி அளித்த  எடியூரப்பா, டெல்லியின் சிக்னலுக்காக காத்திருப்பதாகவும் அதன் பிறகு கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

பாஜக  மேலிட தலைவர்களின் இந்த முடிவால், எடியூரப்பா உள்பட அக்கட்சியின் தலைவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் எடியூரப்பா பதவி ஏற்கும்போதே தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தற்போதே குடுமிப்பிடி சண்டை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.