மணிப்பூரில் ஆளும் பா.ஜ., அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நடந்த ஓட்டெடுப்பில், வெற்றி பெற்ற பா.ஜ., அரசு, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் பா.ஜ., ஆட்சி அமைத்தது. இதனை தொடர்ந்து பா.ஜ., அரசுக்கு ஆதரவு அளித்து வந்த கன்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.,வை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.,க்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். 

இதனால் பா.ஜ. அரசு கவிழும் சூழல் ஏற்பட்டது.இதனைதொடர்ந்து, தேசிய மக்கள் கட்சியின் தலைவரும் மேகாலயா மாநில முதல்வருமான கன்ராட் சங்மா மற்றும் அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ., மூத்த தலைவர்களுடன் பேச்சு நடத்தினர். இதில் தேசிய மக்கள் கட்சியினர் எழுப்பியுள்ள பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அமித்ஷா உறுதி அளித்ததை அடுத்து பிரேன் சிங் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கும் முடிவை கைவிடுவதாக தேசிய மக்கள் கட்சி தலைவர்கள் அறிவித்தனர்.

இதனையடுத்து பா.ஜ., அரசுக்கு மீண்டும் ஆதரவு அளிப்பதாக தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கவர்னரிடம் தெரிவித்தனர். இருப்பினும் பா.ஜ., அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லை என கூறி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது காங்கிரஸ்.இதில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 28 பேரும் கலந்து கொண்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 8 பேர் சட்டசபைக்கு வரவில்லை. 16 பேர் மட்டுமே இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து நடந்த குரல் ஓட்டெடுப்பில் பா.ஜ., அரசு வெற்றி பெற்றது. பாஜக வெற்றிபெற்றதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் சட்டசபையில் இருந்த சேர்களை தூக்கி வீசி அமர்க்களப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.