பி.ஜே.பி.யின் அசைவுகளுக்கு அர்த்தத்தை அரசியல் அகராதியில் தேடித்தேடி அதை அடியொற்றி நடப்பதும், அமைச்சர்களின் மீது வெடிக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி சமாளிப்பதும், இரு அணிகளுக்கு இடையில் நடக்கும் சிலுவைப்போருக்கு தீர்வு சொல்வதுமாகவே ஆளும் அ.தி.மு.க. அணியில் நேரமும் பொழுதும் கழிந்து வந்தது. தி.மு.க.வுக்கோ அதன் தலைமையின் குடும்ப பஞ்சாயத்து எப்ப முடியும், நமக்கு எப்ப விடியும்? என்று காத்திருப்பதிலேயே காலம் நகர்ந்தது.

பி.ஜே.பியின் நிலை பரிதாபத்திலிருக்க, கம்யூனிஸ்டுகளோ காணாமலே போய்க் கிடந்தன. 

இந்த சூழலில் தினகரன் பற்ற வைத்த ஒற்றைப் பட்டாசுதான் ஒட்டுமொத்த அரசியலரங்கையும் அதிர வைத்து லைவ் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. அது, ‘ஓ.பன்னீர்செல்வம் என்னை ஏற்கனவே ரகசியமாக சந்தித்தார். கடந்த வாரம் மீண்டும் சந்திக்க தூதுவிட்டார்.’ என்று தினகரன் தட்டிவிட்ட ஸ்டேட்மெண்டுதான். 

இதற்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததோடு, அந்த சந்திப்பு இப்போது நடக்கவில்லை, எப்போது, ஏன் நடந்தது? என்பதையும் விளக்கினார். ஆனாலும் பன்னீர் மீது எடப்பாடி அணிக்கு இருந்துவந்த கொஞ்ச நஞ்ச பிடிப்பும் இந்த விஷயத்தோடு அறுந்து விழுந்துவிட்டது. இன்னும் அழுத்தமாக சொல்வதென்றால், பன்னீர் அணியில் எஞ்சியிருக்கும் நிர்வாகிகளே அவரை இந்த விஷயத்துக்காக வெறுப்பாய் பார்க்க துவங்கிவிட்டனர். சிம்பிளாய் சொல்வதென்றால், பெரும் சங்கட சுழலுக்குள் சிக்கியிருக்கிறது பன்னீரின் தலை. 

இந்த நிலையில், திடுதிப்பென தினகரன் இப்படியொரு புகாரை கிளப்ப வேண்டிய காரணம் என்ன? என்று யோசிக்கும் அரசியல் விமர்சகர்கள், சமீப காலமாக பி.ஜே.பி. ஆளும் அ.தி.மு.க.வுடனான நட்பிலிருந்து விலகுவதோடு தி.மு.க. பக்கம் பார்வையை திருப்புகிறது! என்றொரு விமர்சனம் வந்தது. ’தி.மு.க. உடன் தேர்தல் கூட்டணிக்கு பி.ஜே.பி. முயலுகிறது.’ என்று பின் வெளிப்படையாகவே போட்டுடைத்தார்கள். ஆனால் ஸ்டாலின் இதற்கு மிக கடுமையாக ரியாக்ட் செய்திட, அந்த மூவ் அப்படியே முடிந்து போனது. 

அதற்கு பின், சமீப சில தினங்களாக ‘பி.ஜே.பி. தினகரனுடன் கூட்டணிக்கு மூவ் செய்கிறது.’ என்றொரு தகவல் தடதடக்க துவங்கியுள்ளது. கூடவே ஆளும் அ.தி.மு.க. புள்ளிகள் தாங்கள் செய்த தவறுகளுக்காக இக்கட்டில் சிக்குவதையும், இதனால் மக்கள் மன்றத்தில் அவர்களின் செல்வாக்கு சரிவதையும் டெல்லி தலைமை விரும்புகிறது! என்றும் ஒரு விமர்சனம் எழுந்தது. 

இந்த நிலையில்தான் பன்னீரை மையப்படுத்தி பட்டாசை ஏவிவிட்டார் தினகரன். இதை பன்னீர் ஒப்புக் கொண்டதன் மூலம் அரசியல் வட்டாரத்தில் அவருக்கு இருக்கும் மரியாதை மங்குவதோடு, எடப்பாடி அணிக்கும் பன்னீருக்கும் இடையிலான உறவுப்பாலம் அதிகமாய் சேதாரமாகி இருப்பதையும் டெல்லி லாபி கவனித்து குளிர்ந்துள்ளது. 

ஆக மொத்தத்தில் ஆளும் அ.தி.மு.க. அணியை நெருக்கடி மேல் நெருக்கடி கொடுத்து ஒதுக்கி, ஒரு கார்னரில் ஓரங்கட்டும் வித்தையை டெல்லி லாபி களமிறங்கி செய்கிறது, இதற்கான டூல்தான் தினகரன்! என்று விமர்சனம் எழுந்திருக்கிறது. ஒரு காலத்தில் தினகரனை விரட்டி விரட்டி வேட்டையாட முயன்ற டெல்லி, மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் கிரேஸை பார்த்துவிட்டு தன் முடிவை அடியோடு மாற்றியிருக்கிறது! என்கிறார்கள். 

ஆனால் அதேவேளையில், ’பன்னீர் மீதான தினகரனின் தாக்குதல்களுக்கு பின்னணியே பி.ஜே.பி.தான் என்றால், தமிழிசையும், தினகரனும் இப்போது சண்டை போட்டுக் கொண்டிருப்பது ஏன்?’ என்று சிலர் சந்தேகம் எழுப்பிட, அதற்கு விடை கூறும் விமர்சன உலகம்....

“அதுதான் அரசியல். தினகரனை பி.ஜே.பி. நெருங்கி நிற்பதாக இப்போதைக்கு வெளியே தெரிய கூடாது என்பதற்காகவே வலிய இந்த வம்பை விலைகொடுத்து வாங்கியிருக்கிறார் தமிழிசை. அதனால்தான் பன்னீருக்கும், தினகரனுக்கும் நடந்த யுத்தத்தின் நடுவில் தலையிட்டு ’எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கும் தூதுவிட்டார் தினகரன்.’ என்று வாலண்டியராக ஒரு ஆஜரை போட்டார். அதற்கு தினகரனோ ‘தினகரன் தூதுவிட்டார் என்றால், தூது வந்தது யார்? என்று தமிழிசை சொல்ல வேண்டியதுதானே. நான் தமிழிசையை நேரில் பார்த்தது கூட கிடையாது.’ என்று பதில் கொடுத்திருக்கிறார். 

இதெல்லாமே நாடகங்கள்தான். தி.மு.க. எங்களின் எதிரி அதனால் அவர்களோடு கூட்டணி கிடையாது! என்று நெத்தியடியாக போட்டுடைத்திருக்கும் தினகரன், பி.ஜே.பி.யுடன் கூட்டணி இல்லை என்பதற்கு ‘மதசார்பின்மை’யை காரணம் காட்டியிருப்பது மிக சாதாரண ஜால்சாப்பு. இந்த வீக்கான காரணத்தை எப்போது வேண்டுமானாலும் தூக்கி எறிந்துவிட்டு பி.ஜே.பி.யுடன் வெளிப்படையான கூட்டு வைக்க தினகரன் தயாராகிவிடுவார். 

தினகரன் பி.ஜே.பி.யின் கூட்டணிக்குள் வருவதன் மூலம் அவர் மீதிருக்கும் ஃபெரா வழக்கு பணால் ஆகலாம். அல்லது அந்த வழக்கை ஒன்றில்லாமல் ஆக்குகிறோம் என்று சொல்லி கூட இவர்கள் தினகரனை இழுத்திருக்கலாம்.

தினகரனின் இந்த திடீர் சடுகுடு தி.மு.க.வைதான் அதிகமாக அதிர்வடைய வைத்துள்ளது. காரணம்? ஏற்கனவே தினகரனுக்கு இருக்கும் செல்வாக்கு சதவீதத்தை நினைத்து ஸ்டாலினுக்கு ஒரு கவலை இருந்தது. ஆனால் பி.ஜே.பி.க்கு தினாவை பிடிக்கவில்லை என்பதால் ஃபெரா வழக்கு மூலம் அவரை நெருக்கி, முறுக்கி ஓரமாய் உட்கார வைப்பார்கள்! என்று நம்பினார். 

ஆனால் இப்படி திடீரென்று தினகரனுடன் பி.ஜே.பி. ரகசிய கூட்டில் இறங்கியிருப்பது ஸ்டாலினை வெகுவாகவே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

ஆக ஒட்டுமொத்தமாக தமிழக அரசியல் அரங்கை தெறிக்க விட்டிருப்பதால்தான் தினகரனை ‘ரெட் அலர்ட்’ என்கிறோம்.” என்று நீண்ட விளக்கம் தருகிறார்கள்.
சர்தான்!