நாடாளுமன்றத்தில் பாஜக அரசு மீது காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஈஸியாத் தோற்கடிப்போம் என பாஜக உறுதியாக கூறி வருகிறது. அதற்கான வியூகங்களை அக்கட்சித் தலைவர்கள் செய்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தின் முந்தைய செசனிலேயே பாஜக அரசு மீது தெலுங்கு தேசம், காங்கிரஸ் கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொணடு வந்தன. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து அவையை முடக்கியதால் இந்த தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று  மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக  தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவைத் தலைவர்  சுமித்ரா மகாஜனிடம் தனித்தனியாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. 

இதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதையடுத்து  இந்த மசோதா மீதான விவாதம் நாளை  காலை 11 மணிக்கு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மத்திய அரசு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை  முறியடிக்க பாஜக எப்படி எல்லாம் வியூகங்களை அமைத்து வருகிறது என்பதை அக்கட்சியின் மூத்த தலைவர்களே வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

535 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் தற்போதைய நிலவரப்படி  மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் இல்லாமல் பாஜகவுக்கு  274 உறுப்பினர்கள், சிவசேனா -18, லோக் ஜனசக்தி-6, சிரோன்மணி அகாலிதளம்-3 என மொத்தம 313 உறுப்பினர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளனர்.

அதே நேரத்தில் பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், ஸ்வாபிமானி பாக்‌ஷா எம்.பி. ராஜு ஷெட்டி ஆகியோரின் ஆதரவைபெற பாஜக  மேலிடம் முயற்சித்து வருகிறது.

இந்த  ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 63 உறுப்பினர்களும், அ.தி.மு.க.வில் 37 உறுப்பினர்களும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் 34 உறுப்பினர்களும், பிஜு ஜனதா தளம் கட்சியில் 20 உறுப்பினர்களும், தெலுங்கு தேசம் கட்சியில் 16 உறுப்பினர்களும், தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சியில் 11 உறுப்பினர்களும் எதிர் கட்சிகளின் பலம் 222 ஆக உள்ளது.

நாடாளுமன்றத்தில்  எந்த மசோதா அல்லது தீர்மானம் நிறைவேறவும் சரிபாதி பலமான 268 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

ஆட்சிக்கு எதிரான தெலுங்கு தேசம் கட்சி முன்வைத்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கப்போவதாக காங்கிரஸ், இடதுசாரி இயக்கங்கள் மற்றும் திரினாமுல் காங்கிரஸ் ஆகியவை அறிவித்துள்ளன. அ.தி.மு.க.,  சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் நடுநிலை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை பகல் முழுவதும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று, அன்று மாலை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.  இதில் மக்களவை சபாநாயகர் வாக்களிக்க முடியாது.

இந்த வாக்கெடுப்பில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுள்ள கட்சி தலைவர்களுடன் கலந்துபேசி 314 உறுப்பினர்கள் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது என அவர் தெரிவித்தார்..இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர்  அனந்த் குமார், மக்களவையில் ஃபுல் மெஜாரிட்யோட இருக்கோம், 21 மாநிலங்களில் ஆட்சி செய்றோம், எங்களை எதிர்த்து நம்பிக்கை இல்லாத் தீர்மானமா ? என கிண்டல் செய்தார்.

மொத்தத்தில் . 314 உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த தீர்மானத்தை நாங்கள் முறியடிப்போம் என  அனந்த குமார் அடித்துக் கூறினார்.