குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்கள், டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகத்தில் திமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற பிரமாண்ட பேரணி சென்னையில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா  தலைமையில் கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி நடந்தது. 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடு முறையை கண்டித்தும் கடந்த வாரம் மேற்குவங்க மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. குடியுரிமை திருத்த சட்டத்தை தங்களது மாநிலத்தில் அமல்படுத்தப் போவதில்லை என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் கொல்கத்தாவில் பேரணி நடத்தப்பட்டது. மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா உள்பட பலர் பேரணியில் கலந்து கொண்டனர். 

இப்பேரணியில் பல்லாயிரக்கணகான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டு குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். இந்த பேரணி கொல்கத்தவையே கலக்கியதால் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிர்ச்சி அடைந்துள்ளார்.