திமுகவுக்காக வேலை செய்யும் பிரசாந்த் கிஷோர் வட இந்தியரா, தென் இந்தியரா, திராவிடரா, ஆரியரா என்று தமிழக பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய பாஜகவின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழக மேலிடப் பொறுப்பாளருமான முரளிதர ராவ் இன்று கோவை மாநகருக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். “ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டுமென்பது எங்களுடைய நீண்ட கால கோரிக்கை. இதனால் ஒட்டு மொத்த இந்தியர்களும் இந்துக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் ராமர் கோயில் கட்டப்படும். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுமே கடவுளிடம் செல்லும் வழி உள்ளது.

 
எனவே, இதில் தமிழ், சமஸ்கிருதம் எனப் பிரித்து பார்க்க தேவையில்லை. பாஜக அனைத்து மொழிகளையும் சமமாகவே பார்க்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இங்கே திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் முஸ்லிம்களின் குடியுரிமைக்காக போராடிவருகிறார். இதை ஏற்க முடியாது.
சிஏஏக்கு நடிகர் ரஜினி ஆதரவளித்ததை வரவேற்கிறோம். திமுகவுக்காக வேலை செய்யும் பிரசாந்த் கிஷோர் வட இந்தியரா, தென் இந்தியரா, திராவிடரா, ஆரியரா? இதற்கு மு.க. ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும். டெல்லி தேர்தலுக்கு பிறகு தமிழக பாஜக தலைவர் அறிவிக்கப்பட்டுவிடுவார். அதிமுக-பாஜக இடையே சுமூகமான உறவு உள்ளது.” முரளிதர ராவ் தெரிவித்தார்.