BJP Wall posters banners with slogan in All Over Tamil Nadu
ஆள துடிக்கும் முன் ஆளுமையை உருவாக்குங்கள்! ’கழகங்கள் இல்லாத தமிழகம், கவலைகள் இல்லாத தமிழர்கள்! ஆளப்போகுது தாமரை’ பா.ஜ.க. நிர்வாகியின் இந்த சுவர் விளம்பரம் தமிழகத்தை ஆண்ட மற்றும் ஆளுங்கட்சிகளை சிரிக்க வைக்கிறது ஆனால் நம்மை சீரியஸாக சிந்திக்க வைக்கிறது. காரணம்? பா.ஜ.க.விடம் தன்னம்பிக்கை இருந்தால் பாராட்டலம், ஆனால் அதீத நம்பிக்கையில் உழல்வது யதார்த்தத்துக்கு எதிர்மாறாக இருக்கிறதல்லவா.
அப்படியானால் தமிழகத்தை ஆளும் உயரத்தை பா.ஜ.க. எட்டாது என்கிறாயா? என்று பாய்ச்சல் காட்ட வேண்டாம்.
சற்றே பதமாக யோசியுங்கள்!
கல்லூரியின் தாளாளர் தன்னுடைய அப்பா என்பதால் சராசரி படிப்பாளியான மகன் பேப்பர் சேஸிங்கின் மூலமாக அவுட்ஸ்டாண்டிங் வாங்கிவிடலாம். ஆனால் தாளாளருக்கு அதுவா பெருமை? கற்கும் வசதியில் மற்ற மாணவர்களை விட துளியும் முன்னுரிமையை ஏற்காமல், மற்ற மாணவ மாணவியரோடு ஒருவராய் அமர்ந்து அந்த மகனே படி படியென படித்து, கள ஆய்வுகளில் உழை உழையென்று உழைத்து தேர்வெழுதி கல்லூரியே எழுந்து நின்று கரகோஷமெழுப்பும் வண்ணம் மிக நேர்மையாக முதலிடம் வாங்குவதுதானே உண்மையான பெருமை!
ஆளப்போகிறோம், தமிழகத்தில் தாமரையின் ஆட்சி மலரப்போகிறது...என்றெல்லாம் ஸ்லோகன் போட்டுக் கொண்டிருக்கும் தமிழக பா.ஜ.க. இதுவரையில் என்ன களப்பணியை கண்டிருக்கிறது? என்பதை யோசிக்க வேண்டும். இதுபோன்ற கேள்விகளைத்தான் அரசியல் விமர்சகர்கள் அடுக்குகிறார்கள்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழ்நாடே மாவட்டத்துக்கு ஒரு மைதானத்தில் குழுமியபோது காலையில் அதை ஆதரித்தும், மாலையில் விமர்சித்தும், இரவில் ரெண்டுங்க்டெட்டான் நிலையெடுத்தும் கருத்து சொன்னது ஒரு களப்பணியா? தமிழனின் பாரம்பரியத்துக்கு பா.ஜ.க. துணை நிற்கும் எனும் நம்பிக்கை தகர்ந்து போன நிலை அல்லவா அது.

நெடுவாசல் போராட்டத்தின் போது, துடைப்பத்தை எடுத்து கிராமப்பெண்கள் அடித்தது அந்த பிராஜெக்டுக்கான ராட்சச வால்வின் மீதுதான்! என்று தமிழக பா.ஜ.க. தலைவர்கள் நினைத்தால் அது குழந்தைத்தனம். வளர்ச்சிப்பணி எனும் பெயரில் எந்த அபாய சங்கையும் தன் வீட்டுக்குள் வந்து மத்திய அரசு ஊதிட தமிழக பா.ஜ.க. அனுமதிக்காது என்று மக்கள் வைத்திருந்த நம்பிக்கை ஆட்டம் கண்ட தருணமல்லாவா அது!

டெல்லியில் தமிழக விவசாயிகள் எலும்பை கடித்தும், ஆடையை அவிழ்த்தும் போராடியபோது பிரதமரின் கான்வாயால் கிளம்பும் புழுதி கூட இவர்களின் பக்கமாய் பறந்து வந்து ‘என்ன? ஏது?’ என்று விசாரிக்காத நிலை எவ்வளவு மோசமானது! தனக்கான அநீதிக்காக தலைநகரில் நின்று போராடுகையில் மாநில கட்சியின் அதிகாரத்தை முழுவதுமாக காண்பித்து தமிழனுக்கு அங்கீகாரம் வாங்கி கொடுக்க தமிழக பா.ஜ.க. தயங்காது என்று நினைத்திருந்தவனின் நம்பிக்கையில் மண் விழுந்த நொடிகளல்லவா அவை.
இன்னும் சொல்லல்லாம் நிறைய. ஆனால் சகோதரி தமிழிசை தலைமையிலான தலைவர்களின் மனம் வெம்பிவிட கூடாது என்பதால் நிறுத்துவோம்.
சூழல் இப்படியிருக்கையிலா ஆளும் ஆசையை கொள்கிறது தமிழக பா.ஜ.க?
ஆட்சியை பிடிப்பது அப்புறம் இருக்கட்டும். முதலில் கட்சி ரீதியான கட்டமைப்பை வலுப்படுத்துங்கள். உட்கட்சியில் ஒருங்கிணைப்பை கொண்டுவாருங்கள். ஒரே விஷயத்தை பற்றி ஆளுக்கொரு கருத்தை வெடிக்கும் பழக்கத்தை விட்டொழியுங்கள். இந்த மாநிலத்தின் தொழில், கல்வி மற்றும் பண்பாட்டு அமைப்புகளின் மத்தியில் உங்களுக்கான உயரத்தை உருவாக்குங்கள்.

சினிமா அமைப்பினர் தங்களின் விழாவுக்காக வெங்கய்யா நாயுடுவை நோக்கி ஓடுவதும், கல்வி நிறுவனங்கள் ஜவடேகர் பின்னே நடப்பதும், தொழில் அமைப்புகள் நிர்மலா சீதாராமனிடம் தேதி கேட்டு காத்துக் கிடப்பதும், ஒருவேளை இவர்களின் இசைவு கிடைக்காத பட்சத்தில் ஸ்மிருதி இரானி, நிதின் கட்கரி என்று எல்லை தாண்டி யோசிப்பதுமாகத்தான் நிகழ்வுகள் போய்க் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில், தமிழர்களால் நடத்தப்படும் விழாக்களுக்கு உங்கள் கட்சியின் வட இந்திய தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக வருவதும், அவர்களோடு நீங்கள் உப விருந்தாளியாக வந்து நிற்பதும் இன்னும் எத்தனை நாட்கள்?
ஆள நினைக்கும் முன் ஆளுமைப்பண்பை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் நினைப்பது போல் ஒருவேளை தாமரையின் ஆட்சி மலர்ந்தால் கழகங்கள் கலகம் செய்யாமலிருக்கும், தமிழகமும் கவலையில்லாமல் இருக்கும்.
இந்த மாற்றத்திற்கு வாய்ப்பிருக்கிறதா?!
