*    பா.ஜ.க. தன் கனவு திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டதுதான் குடியுரிமை பாதுகாப்பு சட்டம். இந்த சட்டம் முஸ்லீம்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானது. வடகிழக்கு மாநிலங்களில் நடப்பது போல் தமிழகத்திலும் பெரிய போராட்டம் நடத்திட, தி.மு.க.வுடன் பேசி முடிவெடுக்கப்படும். 
-    திருமாவளவன் (வி.சி.க. தலைவர்)
*    ஆர்.எஸ்.எஸ். நிறுவனர், கோல்வால்கர் கூறியபடி தான் முஸ்லீம்களுக்கு எதிராக மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. சமூக நீதி, மதச்சார்பின்மை ஒழிக்கப்பட்டு, இந்தியாவில் இந்து ராஜ்ஜியம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதை அழிக்க களம் காணுவோம்!
-    கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்)

*    மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டமானது, மஹாத்மா காந்தியை மீண்டும் சுட்டுக் கொன்றதற்கு சமம். இலங்கையின் புதிய அதிபருடன், மோடி அரசு இணக்கமான போக்கை கொண்டுள்ளதால் அபாயகரமான விளைவுகள் ஏற்படும். 
-    வைகோ (ம.தி.மு.க. பொதுசெயலர்)

*    தமிழர் பிரச்னை என்ற பெயரில், அரசியல் லாபத்திற்காக தி.மு.க. தலைமை இலங்கை பிரச்னையை எழுப்புகிறது. அவர்கள் ஆட்சி காலத்தில் இங்கு இலங்கை அகதிகளாக ஒரு கோடி பேர் இருந்தனர். போருக்கு பின் இலங்கையில் அமைதி திரும்பியுள்ளது. அங்கு, இலங்கை தமிழர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதனால் தற்போதுள்ள பதினாறாயிரம் இலங்கை அதிகளும் விரைவில் நாடு திரும்பிவிடுவர்.
-    சுப்பிர்மணியன் சுவாமி (பா.ஜ.க. தலைவர்)

*    முன்னாள் காஷ்மீர் முதல்வரும், 82 வயது நிரம்பிய, லோக்சபா எம்.பி.யுமான பாரூக் அப்துல்லாவை எவ்வித காரணமும் இன்றி, பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைத்திருப்பது, நம் ஜனநாயக மரபுகளையும், அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகளையும் அவமதிக்கும் செயல்.
-    மு.க. ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)


*    இந்தியாவில் ஜாதி, மதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு மசோதாவால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. குடியுரிமை சட்ட மசோதாவை பொறுத்தவரை எல்லா மதங்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்த பின், இது போன்ற மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பது எங்கள் கட்சியின் நிலைப்பாடு!
-    பிரேமலதா (தே.மு.தி.க. பொருளாளர்)

*    ஸ்டாலின் தலைவரானதில் இருந்தே தி.மு.க.வுக்கு பின்னடைவுதான். லோக்சபா தேர்தலில், ஒரு விபத்தில் தி.மு.க. வென்றது. முன்னுக்குப் பின் முரணாக மட்டுமே ஸ்டாலின் பேசுகிறார். அவரைத் தவிர குடும்பத்தினர் யாரும் கட்சி பதவிக்கு வர மாட்டார்கள்! என்றார். அவர் சொன்னது போல் நடந்தாரா? மக்களை சந்தித்தால், தோல்வி நிச்சயம் என்பதாலும், மாநில தேர்தல் ஆணையத்தை பகைக்க முடியாததாலும் அமைச்சர் வேலுமணி மீது பழி போடுகிறார் ஸ்டாலின். 
-    செல்லூர் ராஜூ (கூட்டுறவுத் துறை அமைச்சர்)
*    நாட்டின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் எந்த திட்டமும் இல்லை. எதிர்க்கட்சிகள் பல மாநிலங்களில் வன்முறையை தூண்டிவிட்டு உள்ளன. ஆனால், அதை மக்கள் நிராகரித்து விட்டனர். வன்முறையை தூண்டிவிட்டு அதில் குளிர்காய இவர்கள் திட்டமிட்டனர். எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கையின் மூலம், பார்லிமெண்ட் எடுத்த இந்த முடிவு ஆயிரம் சதவீதம் சரியானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 
-    நரேந்திர மோடி (பிரதமர்)

*    மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும்! என்பதால்தான் இறைவன் எனக்கு கவர்னர் பதவியை தந்துள்ளார். தமிழகத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் திட்டத்தை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். இத்திட்டத்தை, தெலுங்கானா அரசும் செயல்படுத்தி வருகிறது. தெலுங்கானா மாநில நிறம் ‘பிங்க்’ என்றாலும், தமிழகத்தை போல் அங்கேயும் பச்சை நிற பெட்டியில் குழந்தைகளுக்கான பெட்டகம் வழங்கப்படுவது பெருமை அளிக்கிறது. 
-    தமிழிசை (தெலுங்கானா கவர்னர்)