பழனியில் சாமி தரிசனம் செய்யச் சென்ற விவசாய சங்கத் தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்களை பாஜகவினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மூலம் விவசாயம் செய்வதை தடைசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நூறுநாள் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பழனியில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் ஆதரவாளர்கள்  சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்குச் சென்றனர். அப்போது அங்கு வந்த பாஜகவினர் அவர் மீது தாக்குதல் நடத்தியதோடு செருப்பையும் வீசினர். இந்த தாக்குதலில் அய்யாகண்ணுவின் ஆதரவாளர்  ஒருவர் படுகாயம் அடைந்தார்.

அண்மையில்  திருச்செந்தூர் வந்த அய்யாக்கண்ணு கோவிலுக்குள் உள்ள பகதர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினர். அப்போது அங்கிருந்த தூத்துக்குடி மாவட்ட பாஜக மகளிரணி பொது செயலாளர் நெல்லையம்மாள், துண்டு பிரசுரம் கொடுப்பதை தடுத்து நிறுத்தினார்.

அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. திடீரென்று அய்யாக்கண்ணு கன்னத்தில் நெல்லையம்மாள் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.