தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், பாஜக தேர்தல் பணிகளை தீவிரமாக தொடங்கிவிட்டது. அண்மை காலமாக தமிழகத்தில் அடுத்து பாஜக ஆட்சிதான். பாஜக கைகாட்டும் கட்சிதான் ஆட்சியளிக்கும் என்றெல்லாம் தமிழக பாஜக தலைவர்கள் பேசிவருகிறார்கள். கட்சியில் பல தரப்பினரையும் சேர்க்கவும் அக்கட்சி ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக திமுகவிலிருந்து ஆட்களை பாஜகவுக்கு இழுக்க தீவிர முயற்சி செய்து வருகிறது. 
இ ந் நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் அடுத்து தமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சி அமையும் என்று தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாக தமிழக அரசு கூறுகிறது. அப்படியானால் மதுரையை இரண்டாவது தலைநகரமாக்க அரசு மாற்ற வேண்டும். அதன் தொடக்கமாகத்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே தமிழ் தலைநகரமாக மதுரை  உள்ளது. ஆனால், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சி பெறாமலேயே  உள்ளன. எனவே, மதுரையை இரண்டாவது தலைநகரமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி திருவிழா என்பது தேசிய ஒருமைப்பாட்டு பண்டிகை. அதற்கான அனுமதியை தமிழக அரசு கண்டிப்பாக கொடுக்க வேண்டும். தமிழகத்தில் இனி பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சிதான் நடைபெறும்.” என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.