அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதே கூட்டணி கணக்குகள் தமிழகத்தில் மாற ஆரம்பித்துள்ளன.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு உருவான பாஜக – அதிமுக உறவு கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கூட்டணியாக உருமாறியது. அதன் பிறகு அந்த கூட்டணி இடைத்தேர்தலில் தொடர்ந்து தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரை வந்துள்ளது. ஆனால் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு பாஜக எடுத்துள்ள நிலைப்பாடு அதிமுகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது போல் உள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதம் 43 சதவீதமாக உள்ளது.

அதே சமயம் திமுக 47 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. மேலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் கூட திமுக கூட்டணிக்கே அதிக இடங்களை கொடுத்துள்ளது. அமைச்சர்கள்,  அதிகாரம், பண பலம் என அனைத்தையும் தாண்டி மக்கள் அதிமுகவை ஒதுக்கிவிட்டு திமுகவிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். இதன் மூலம் மக்கள் பாஜக – அதிமுக கூட்டணியை விரும்பவில்லை என்று அதிமுகவினர் வெளிப்படையாக பேச ஆரம்பித்தனர்.

இந்த நேரத்தில் திடீரென பாஜக தனித்து போட்டியிட்டு இருந்தால் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை வென்று இருப்போம் என்று ஒரு குண்டை தூக்கி போட்டார் பொன் ராதாகிருஷ்ணன். கடந்த ஆண்டின் இறுதியில் கூட கூட்டணி தொடர்பாக சில வில்லங்களை கருத்துகளை உதிர்த்திருந்தார் பொன்.ராதா. அதிமுகவுடன் மக்களவைத் தேர்தலுக்கு தான் கூட்டணி வைத்தோம், உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து கட்சி மேலிடம் தான் முடிவெடுக்கும் என்று அவர் கூறினார்.

ஆனால் அன்றைய தினமே அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது என்று பேட்டி அளித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இப்படி தொடர்ந்து பொன் ராதா பேசுவதன் பின்னணியில் கூட்டணி கணக்கு உள்ளதாக கூறுகிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் வரை மட்டுமே அதிமுக கூட்டணி அதன் பிறகு அந்த கட்சியுடன் இணைந்து இருப்பதால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்று பாஜக நம்புவதாக சொல்கிறார்கள்.

அதிமுக – திமுகவிற்கு மாற்றாக உருவாகும் அணி தான் தமிழகத்தில் பாஜகவிற்கு எதிர்காலம் என்கிற கணக்கும் அக்கட்சியின் மேலிடத்தில் உள்ளது. அந்த வகையில் ரஜினி தலைமையிலான கூட்டணி அல்லது பாமக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது என்பது தான் பாஜகவிற்கு எதிர்காலம் என்கிற கணக்கை போட்டு அந்த கட்சி நிர்வாகிகள் செயல்பட ஆரம்பித்துள்ளதாக சொல்கிறார்கள்.

அரசாங்க ரீதியில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே இணக்கமான சூழல் இருந்தாலும் அரசியல் ரீதியாக இனி அதிமுகவிற்கு எதிராக பாஜக காய் நகர்த்தும் என்கிறார்கள். ரஜினி கட்சி ஆரம்பித்தால் சொல்லவே வேண்டாம் கூட்டணியை முறித்துக் கொண்டு அங்கு சென்று சரண்டர் ஆகவே பாஜக விரும்பும் என்றும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதே கூட்டணி கணக்குகள் ஆரம்பம் ஆகியுள்ளன.