BJP opposition to Irumbuthirai
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள இரும்புத்திரை படம் இன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். ஹீரோயினாக சமந்தா, அர்ஜூன், ரோபோ சங்கர், வின்செண்ட் அசோகன், டெல்லி கணேஷ் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
நடைமுறை பிரச்சனைகள் குறித்து இந்த படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இரும்புத்திரை படத்தை மக்கள் வெகுவாக ஈர்த்து வருவதாக திரைப்படக் குழு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் நலத்திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளதாக கூறி, பாஜகவினர் இன்று காசி தியேட்டர் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாஜகவினரின் எதிர்ப்பு காரணமாக 2 காட்சிகளை காசி தியேட்டர் நிர்வாகம் ரத்து ய்துள்ளது. படத்தில் இருந்து மத்திய அரசுக்கு எதிரான காட்சிகளை நீக்கவும் பாஜகவினர் வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய அரசின் ஆதார் அட்டை குறித்த தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும, மத்திய அரசின் டிஜிட்டல் திட்டத்திற்கும், கொள்கைக்கும் எதிராக காட்சிகள் அமைந்துள்ளதாகவும், இதனை பொதுமக்கள் பார்த்தால் தங்களின் ஆதார் தகவல்கள் குறித்து பீதி அடைவார்கள் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து நடிகர் விஷால், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசும்போது, ஆபாச படம் எடுக்கவில்லை என்றும், சமூக அக்கறையுடன்தான் படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதனை மக்கள் விரும்புவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
இன்று வெளியான இரும்புத்திரை திரைப்படம், சிறப்பான வரவேற்வை பெற்றுள்ளது. மக்களுக்கு பிடித்துள்ளதால்தான், இந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இரும்பு திரைப்படத்துக்கு நெருக்கடிகள் அதிகமானால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதாகவும் அவர் கூறினார்.
சில மாதங்களுக்கு முன்னர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசுக்கு எதிரான காட்சிகள் அமைக்கப்பட்டதால், அந்த படத்துக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் விஷால் நடித்த இரும்புத்திரை படத்துக்கும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
