கட்சிப் பணியைச் செய்யக்கூட பலரும் முன்வர மாட்டார்கள். நிர்வாகிகள்தான் தேடிச்செல்லும் நிலை இருந்தது. ஆனால், தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்தினோம்.

1999-ஆம் ஆண்டில் பாஜகவுக்கு 2 எம்எல்ஏக்களே இருந்த நிலையில் கர்நாடகத்தில் ஆட்சியை பிடித்தது எப்படி என்பது குறித்து புதுச்சேரியில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா விளக்கியுள்ளார்.

புதுச்சேரியில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூகூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பங்கேற்று பேசினார். “கடந்த 1999-ஆம் ஆண்டில் கர்நாடகாவில் பாஜகவுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள்தான் கிடைத்தார்கள். அப்போது கட்சிப்பணி செய்யக்கூட பாஜகவுக்கு நிர்வாகிகள் இல்லை. கட்சிப் பணியைச் செய்யக்கூட பலரும் முன்வர மாட்டார்கள். நிர்வாகிகள்தான் தேடிச்செல்லும் நிலை இருந்தது. ஆனால், தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்தினோம். இன்று ஆட்சியில் இருக்கிறோம். 

நேரடியாகக் கட்சிப்பணி செய்ய பலர் முன்வரலாம். ஆனால் மருத்துவம், கணக்கு தணிக்கையாளர் உட்பட பல்வேறு துறைகளில் பணியாற்றுவோர் கட்சி பணிக்கு நேரடியாக வரமாட்டார்கள். ஆனால் அவர்கள் மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பார்கள். அவர்களை எல்லாம் கட்சியில் இணைத்து செயல்பட வைக்க வேண்டும். அதற்காகத்தான் பல்வேறு பிரிவுகளில் அணிகள் இயங்குகின்றன. தற்போது அதிகபட்சமாக 24 பிரிவுகள் பாஜகவில் உள்ளன. இந்தப் பிரிவுகளில் உள்ளவர்களுக்கு வழிகாட்டவே கூட்டங்களை நடத்துகிறோம். நம்பிக்கையோடு செயல்படுபவர்களுக்கு உரிய மரியாதையை கட்சி வழங்கும்” என்று நிர்மல்குமார் சுரானா தெரிவித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், “புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வளர்ச்சி தனி நபரால் வந்தது கிடையாது. நாம் எல்லோரும் இணைந்து பணியாற்றியதால் கிடைத்தது. ஆனால், இந்த வளர்ச்சி போதுமானதல்ல. இப்போது 12 எம்எல்ஏக்கள்தான் இருக்கிறோம். இன்னும் பல தொகுதிகளில் நாம் காலூன்றி வெற்றி பெற வேண்டும். 2024-இல் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. அப்போது புதுச்சேரியில் நாம் வெற்றி பெற வேண்டும். கட்சியைக் கீழ்மட்டத்திலிருந்து வலுப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கெல்லாம் உள்ளது” என்று நமச்சிவாயம் பேசினார்.