நாடாளுமன்ற துணை சபாநாயகரான தம்பிதுரை ஜெ., மரணமடைந்து, சசிகலா கழக பொதுச்செயலாளராகி, எடப்பாடியார் முதல்வராக பதவியேற்ற காலங்களில் டெல்லிக்கும், தமிழகத்துக்கு இடையில் ஒரு பாலமாகவே இருந்தார். சொல்லப்போனால் தமிழக மீதான மோடி அரசின் அழுத்தங்களை ‘இயல்பான மற்றும் நலன் தரக்கூடிய ஒன்றுதான்’ என்கிற ரீதியிலேயே பேசிவந்தார். 

ஆனால் கடந்த ஒரு மாதமாக தம்பிதுரையின் போக்கில் மிகப்பெரிய மாறுதல் உருவாகியுள்ளது. மத்திய அரசை மிக கடுமையாக விமர்சித்து வருபவர், பி.ஜே.பி.யை தாக்கித் தள்ளி வருகிறார். தமிழகத்தில் தி.மு.க. உடனான கூட்டணியை நோக்கி பி.ஜே.பி. நகர்ந்து வருவதாக சொன்னவர், ‘அழகிரியின் பேரணியன்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் ஐ.டி. ரெய்டை மத்திய அரசு நடத்தியதே பேரணி மீதான மக்களின் கவனத்தை திசைதிருப்பத்தான். ஸ்டாலினுக்கு சப்போர்ட்டீவான நடவடிக்கை இது.’ என்று தாளித்தார். இது மத்தியரசை கடுப்பாக்கியது. 

இந்நிலையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தனது கரூர் தொகுதிக்குள்  மெதுவாக வலம் வர துவங்கிவிட்டார் தம்பிதுரை. அடிப்படை வசதிகள் இல்லை! என்று மக்கள் பல இடங்களில் அவரை மறிக்கிறார்கள். ஆனாலும் அவர் அசராமல் அங்கே நின்று மத்தியரசுக்கு எதிராகவே பேட்டிதட்டுகிறார். 

சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பொதுமக்களிடம் குறைகளை கேட்டுவிட்டு, “பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்தியரசுதான் குறைக்கவேண்டும். மாநில அரசால் அதிகளவில் குறைக்க முடியாது. தனியார் நிறுவனங்கள் அதிகளவில் பயன்படையும் வகையில் மத்தியரசு செய்துவிட்டது. மாநில அரசின் அதிகாரங்களையும், உரிமைகளையும் முழுமையாக மத்தியரசு பறித்துவிட்டது.” என்று போட்டுத் தாக்கினார். 

உளவுத்துறை மூலமாக இந்த தகவல் அடுத்த சில நிமிடங்களில் டெல்லியை சென்றடைந்துவிட்டது. தம்பிதுரையின் தொடர் எதிர்ப்பு பேச்சுக்களால் கடுப்பான மேலிடம், அவரது ஃபைலை எடுக்க சொல்லியிருக்கிறது. அதன்படி மிக விரைவில் தம்பித்துரை ஷாக் ஆகும் வண்ணம் ரெய்டு உள்ளிட்ட ஏதோ ஒன்று நடக்கலாம் என்கிறார்கள். கோயமுத்தூரில்  உள்ள கலைமகள் கலை மற்றும்  அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி எனும் பெயரில்  பாதுகாப்பற்ற முகாம் ஒன்று சில வாரங்களுக்கு முன் நடத்தப்பட்டது. அப்போது பயிற்சியாளரால் மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்ட மாணவி பரிதாபமாய் உயிரிழந்தார். 

இந்த காட்சிகளை வீடியோ செய்த மாணவர்கள் வாட்ஸ் அப்பில் வெளியிட அது வைரலானது. இந்த கல்லூரி தம்பிதுரை குடும்பத்துக்கு சொந்தமானதாம். இதன் தற்போதைய நிர்வாகத்தில் சின்ன மாறுதல்கள் இருந்தாலும் கூட, தம்பிதுரையின் குடும்பத்தினர் அதன் முக்கிய பொறுப்பு லகான்களை வைத்துள்ளனர். நடந்த மரணத்துக்கு பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுவிட்டாலும் கூட, பாதுகாப்பற்ற பயிற்சி நடத்தப்பட காரணமாக இருந்த கல்லூரி மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

எனவே இந்த விஷயத்தை கையிலெடுக்கும் திட்டத்தில் உள்ளனர் தமிழக பி.ஜே.பி.யினர். தன் பக்கத்தில் இவ்வளவு பெரிய ஓட்டை உடைசல் மற்றும் அநியாயங்களை வைத்திருக்கும் தம்பிதுரைக்கு மத்தியரசை விமர்சிக்க எந்த தகுதியும் கிடையாது! என்கிற டைட்டிலோடு அவரை டரியல் செய்யும் திட்டத்தில் உள்ளனர். கூடவே கரூர் மக்களவை தொகுதியில் உள்ள அடிப்படை வசதியில்லா நிலை, காவிரி ஆற்றில் நடக்கும் மணல் திருட்டுக்களை தடுக்காதது உள்ளிட்ட பல பிரச்னைகளை வைத்து தொடர் போராட்டங்களை, மக்கள் குமுறல்களை உசுப்பிவிடும் திட்டமும் ரெடி. 

மாநில பி.ஜே.பி.யால் தம்பிதுரை இப்படி கார்னர் செய்யப்பட, ரெய்டு போன்ற நடவடிக்கைகளால் டெல்லி லாபியால் அவர் கட்டம் கட்டப்படுவதும் கூடிய விரைவில் நடக்குமென்கிறார்கள். 

ஆனால் அதேவேளையில், மத்தியரசுக்கு எதிராக பேசினால் இதுவெல்லாம் நடக்கும் என்பது தம்பிதுரைக்கு தெரியும். அதை எதிர்கொள்ள அவரும் தயாராகி வருகிறார் முழு அளவில். கலைமகள் கல்லூரியில் நடந்த விவகாரத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்புமில்லை! என்று ஊரறிய அறிக்கை விடுவது! அதுயிதுவென ஏகப்பட்ட ஸ்கெட்ச்களை அவரும் போட துவங்கிவிட்டார். 
ஆக அடுத்து கரூரை மையப்படுத்தி புயல் சுழன்றடிக்கலாம்!