Asianet News TamilAsianet News Tamil

அ.தி.மு.க.வின் ‘ஆண்மை’யை உரசிய பா.ஜ.க. நயினார்: பழைய ஆத்திரமா? புதிய அதிகாரமா?

மாமியார் – மருமகள் பஞ்சாயத்து போல் ஆகிவிட்டது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையிலான உறவு..!

BJP Nayinar Nagendran controversial comment on ADMK shocking background
Author
Chennai, First Published Jan 28, 2022, 6:49 AM IST

மாமியார் – மருமகள் பஞ்சாயத்து போல் ஆகிவிட்டது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையிலான உறவு. ஒருவரை ஒருவர் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உரசி, இடித்து, முட்டி மோதி, ஆத்திரத்தை தணித்துக் கொள்கின்றனர். இதில் மாமியார் யார்? என்று கேட்டால், சாட்ஷாத் பா.ஜ.க.தான். ஏனென்றால் அதனிடம் அதிகம் அடிபடுவது அ.தி.மு.க.தான்.

அரியலூரை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் இறந்த விவகாரம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துக்  கொண்டிருக்கிறது. ஆளும் தி.மு.க. அரசு இதில் வேண்டுமென்றே மவுனம் காப்பதாகவும், இதில் நீதி கிடைக்கும் வரையில் நாங்கள் ஓயப்போவதில்லை! என்று சொல்லியும் தமிழக பா.ஜ.க. தினம் தினம் ஆர்பாட்டம், போராட்டம் என்று பட்டாஸ் செய்து கொண்டிருக்கிறது. இதற்காக தலைநகரில் உண்ணாவிரதம் இருந்து ஆளும் கட்சியை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும், மாஜி அ.தி.மு.க. அமைச்சருமான நயினார் நாகேந்திரன் ‘சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக ஆண்மையோடும் முதுகெலும்போடும்  பேசக்கூடிய அ.தி.மு.க.வை நான் பார்க்க முடியவில்லை’ என்று போட்டாரே ஒரு போடு.

BJP Nayinar Nagendran controversial comment on ADMK shocking background

இது ஒட்டுமொத்த அ.தி.மு.க. நிர்வாகிகளையும் இரத்தம் கொதிக்க வைத்துள்ளது. ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு, பா.ஜ.க.வின் மிகப்பெரிய ஆதரவாளரான  வி.வி.ஐ.பி. ஆடிட்டர் ஒருவரும் இப்படித்தான் அ.தி.மு.க.வை ‘ஆண்மை இருக்கிறதா?’ என்று பேசினார். இன்றோ நயினார் பேசியிருக்கிறார்.

இதுபற்றி ஆவேசம் காட்டும் அ.தி.மு.க.வின் தலைமை கழக பேச்சாளர்கள் “நயினார் நாகேந்திரன் எங்கள் கட்சியின் மேலுள்ள பழைய பகையை தீர்த்துள்ளார். ஒரு காலத்தில் எங்கள் கட்சியிலிருந்து பிழைத்தவர்தானே அவர். நெல்லையில் வளைத்து வளைத்து அவர் சொத்து சேர்த்ததெல்லாம் எப்படி? அ.தி.மு.க.வின் அமைச்சராக, எம்.எல்.ஏ.வாக, மா.செ.வாக இருந்த அதிகாரத்தை வைத்துதானே.

அவரது செயல் கட்சிக்கு எதிராய் இருந்ததால் அம்மா அவரை டம்மியாக்கினார். இதனால் வெளியே போனவர் பா.ஜ.க.வில் இணைந்தார். இந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மீண்டும் அ.தி.மு.க.வினுள் இணைய வாய்ப்பு கேட்டார். ஆனால் தலைமை அதை அனுமதிக்கவில்லை. அந்த கோபம் அவருக்குள் இருக்கிறது. தப்பிப் பிழைத்து பா.ஜ.க.வில் எம்.எல்.ஏ.வாகிவிட்டவர் இப்போது எங்களைப் பார்த்து ‘ஆண்மையோடு செயல்படலை’ என்று கேட்கிறார்.

BJP Nayinar Nagendran controversial comment on ADMK shocking background

அவர் என்ன தன்னை தமிழக பா.ஜ.க.வின் புதிய அதிகார மையமாக நினைத்துக் கொண்டாரா? நாக்கை அடக்குங்கள் நயினார்.” என்று கொதித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க.வின் தலைவரான அண்ணாமலை, நயினாரின் பேச்சுக்காக அ.தி.மு.க. தலைமையிடம் வருத்தம் தெரிவிக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios