திமுக தலைவர்கள் நடத்தும் மதுபான ஆலைகளை மூடச் சொல்ல வேண்டியதுதானே என்று பாஜக தேசிய  தலைவர் ஹெச். ராஜா திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதில் அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 40 நாட்களாக தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால், அண்டை மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால், தமிழக எல்லையோர மாவட்டங்களிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு மதுபானம் வாங்க குடிமகன்கள் செல்வதைக் காரணம் காட்டி, தமிழகத்திலும் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன.

இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக கூட்டணி கட்சிகள், இன்று ஒரு நாள் கருப்புச் சின்னம் அணிந்து வீட்டு வாசலில் நின்று கோஷம் எழுப்ப முடிவு செய்தன. இதை வழிமொழித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “ மதுபானக் கடைகளைத் திறப்பதில் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசைக் கண்டித்தும், மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்காததைக் கண்டித்தும்; மே 7-ம் தேதி ஒருநாள் மட்டும் கருப்புச் சின்னம் அணிவது என்றும்; அன்று காலை 10 மணிக்கு அவரவர் இல்லத்தின் முன் ஐந்து பேருக்கு மிகாமல் 15 நிமிடங்கள் நின்று, ‘கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அதிமுக அரசைக் கண்டிக்கிறோம்’ என முழக்கமிட்டுக் கலைவோம்” என்று தெரிவித்திருந்தார்.

 
உதயநிதியின் இந்த அறிவிப்புக்கு பாஜக தேசிய தலைவர் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், “முழக்கம் எதுக்கு. திமுக தலைவர்கள் நடத்தும் மதுபான ஆலைகளை மூடச் சொல்ல வேண்டியதுதானே. மக்களை ஏமாற்றும் திமுக.” என்று விமர்சித்துள்ளார்.