பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, கோயில் ஊழியர்களை அவதூறாக பேசியதாக கூறி இந்து அறநிலையத்துறை ஊழியர்கள், சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, போலீசார் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரமுற்ற பாஜக ஹெச்.ராஜா, தன் நிலை தடுமாறி, என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், மயிறு... மட்டை என மோசமாக வாய்க்கு வந்ததை பேசி உளறிக் கொட்டிவிட்டார். 

ஆமை புகுந்த வீடும், அறநிலையத்துறை புகுந்த கோயிலும் உருப்படாது என்றும், கோயில் இருக்கு, இடிபாடா இருக்கும் என்றும் பேசியிருந்தார். அவரது பேச்சால், காவல் துறை அதிகாரிகள், நீதித்துறையினர், அறநிலையத்துறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தின் ஏராளமான இடங்களில் அவருக்கு எதிராக புகாரும் கொடுக்கப்பட்டது., சில புகார்களின் அடிப்படையில், ஹெச்.ரஜாவை பிடிக்க 2 தனிப்படை போலீசார் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், ஒரு கூட்டத்தில் ஹெச்.ராஜா கலந்து கொண்டு பேசினார்.

 

இதனைத் தொடர்ந்து, ஹெச்.ராஜா, வரும் அக்டோபர் 3 ஆம் தேதி 4.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், கோயில் ஊழியர்களை அவதூறாக பேசிய ஹெச்.ராஜாவை கண்டித்து திருவாரூரில், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு, தியாகராஜ சாமி கோயில் பணியாளர்கள் மற்றும் உதவி ஆணையர் அலுவலகத்தின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

ஹெச்.ராஜாமீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து ஹெச்.ராஜா மீது சென்னை காவல் ஆணையரிடம் இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் புகார் மனு அளித்தனர். இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் பற்றி ஹெச்.ராஜா அவதூறாக பேசியதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் ஹெச்.ராஜா மீது பல்வேறு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.