Asianet News TamilAsianet News Tamil

"எந்திரன் ரோபோ வர வேண்டும்... லஞ்சம் பெறுபவர்களின் கை வெட்டப்பட வேண்டும்" - ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு!

BJP national secretary H. Raja journalists meet
BJP national secretary H. Raja, journalists meet
Author
First Published Feb 23, 2018, 3:14 PM IST


லஞ்சம் வாங்கும் போலீசாரின் கையை வெட்டும் எந்திரன் ரோபோ போல, லஞ்சம் பெற்று ஆக்கிரமிப்புகளுக்கு துணை போன அதிகாரிகளின் கையையும் வெட்ட ரோபோ இயந்திரங்கள் வர வேண்டும் என்று பாஜகவின் ஹெச்.ராஜா பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு தற்போது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக சார்பாக நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜகவின் தேசிய செயலார் ஹெச்.ராஜா தஞ்சை சென்றுள்ளார். தஞ்சை போகும் வழியில், புதுக்கோட்டையில் ஹெச்.ராஜா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடடில் எங்கெல்லாம் இந்து கோயில்கள் ஆக்கிரமித்து கிறிஸ்துவ அமைப்புகள் கட்டடங்கள் கட்டியுள்ளன என்பது தொடர்பான பட்டியலை கூறினார்.

புதுக்கோட்டையிலும் அப்படி ஓர் இந்து கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்திருப்பதை நேரில் பார்த்துவிட்டு வந்ததாகவும் கூறினார். இதுபோன்ற ஆக்கிரமிப்புகளுக்கு தாசில்தார், சார் பதிவாளர் போன்றோர் லஞ்சம் பெற்றுக் கொண்டு துணை போகிறார்கள் என்றும் ஹெச்.ராஜா குற்றம் சாட்டினார்.

எந்திரன் படத்தில் வரும் ரோபோ, தன்னிடம் லஞ்சம் கேட்டு கையை நீட்டிம் டிராஃபிக் போலீசின் கையை வெட்டும். அதுபோல லஞ்சம் வாங்கிக் கொண்டு இந்து கோயில் நிலங்களை கிறிஸ்துவ, முஸ்லிம் அமைப்புகளுக்கு ரிஜிஸ்டர் செய்து தரும் அரசு அதிகாரிகளைக் கண்டுபிடித்து அவர்களின் கையை வெட்டுவதற்கு ரோபோ போன்ற இயந்திரங்கள் வர வேண்டும் என்றார்.

புதுகையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்து கோயிலை மீட்பதற்காக அயோத்தியில் ராமர் கோயிலை மீட்க ஒன்று திரண்டதுபோல நாங்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம் என்று கூறினார். அந்த இடத்தை கிறிஸ்தவ அமைப்புகளுக்குப் பதிவு செய்து கொடுத்த தாசில்தார், சார் பதிவாளர் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அரசைக் கேட்டுக் கொள்கிறேன். அப்படி செய்யவில்லை என்றால் சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் வீட்டு முன்பாக திரண்டு, மண்ணை வாரித் தூற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன் என்று கூறினார். 

கோயில் சொத்துக்களை ஆட்டையப் போடத்தான் திராவிடக் கட்சிகள், கடவுள் இல்லை என்று இத்தனை வருடங்களாக சொல்லித் திரிந்தன. இந்துக்கள் இதைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று ஹெச்.ராஜா கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios