நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றினைய வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் பாஜக

நாட்டில் உள்ள 18 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இதே வெற்றியுடன் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று 3 வது முறையாக ஆட்சி அமைக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இதற்கான பணிகளை துவங்குமாறு மாநில தலைமைகளுக்கு பாஜக உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து மாநில தலைமைகளும் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகிறது. செயல்படாத கட்சி நிர்வாகிகளை மாற்றி புதிய நிர்வாகிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில் பாஜகவை எதிர்க்க மிகப்பெரிய வியூகம் அமைக்க வேண்டிய கட்டாயம் எதிர்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இதற்காக காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகள் ஒன்றினைந்து பல முறை ஆலோசனை நடத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் தலைமையில் எதிர்கொள்வதா?அல்லது மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்கொள்வதா என எதிர்கட்சிகளுக்கு இடையே கேள்வி எழுந்துள்ளது.

சிதறி கிடக்கும் எதிர்கட்சிகள் ?

இந்தநிலையில் தான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் அண்ணா அறிவாலயம் கட்டிடம் திறப்பதற்காக டெல்லி சென்றுள்ளார். அப்போது பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த பயணம் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளை ஒன்றினைக்கும் என கூறப்பட்டது. இது தொடர்பாக செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், மாநில உரிமைகள், கல்வி உரிமைகள் ஆகியவற்றை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என தெரிவித்தார். அனைவரும் தங்கள் தனிப்பட்ட அரசியலை ஒதுக்கிவிட்டு இந்தியாவை காக்க ஒன்றுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் மாநில அரசியலுக்கும் தேசிய அரசியலுக்கும் வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்கவில்லை என கூறிய ஸ்டாலின் தேசிய அரசியல் என்பது மாநில அரசியலின் கலவையாகும். எனவே, இரண்டையும் பிரிக்க முடியாது என கூறினார்.

எதிர்கட்சிகள் ஒன்றினைய வேண்டும்

 பா.ஜ.கவை எதிர்ப்பது அரசியல் கட்சியின் மீதான தனிப்பட்ட வெறுப்பு அல்ல என்று தெரிவித்தவர், பா.ஜ.கவின் கொள்கைகளை விமர்சிக்கிறோம் தனிப்பட்ட நபர்களை அல்ல என தெரிவித்தார். விமர்சனங்கள் அனைத்தும் கொள்கை ரீதியானவை. நாங்கள் அதை என்றென்றும் செய்வோம். எந்தச் சூழலிலும் செய்வோம். என ஸ்டாலின் உறுதிபட கூறினார். காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பா.ஜ.கவை எதிர்க்கும் மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜ.கவை எதிர்த்துப் போராட வேண்டும். தமிழகத்தில் தி.மு.க உடன் இருப்பதுபோல் பிற மாநிலங்களில் உள்ள கட்சிகளுடனும் காங்கிரஸ் நட்புறவை வளர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில் எதிர்கட்சிகள் சிதறி இருப்பது தோல்வியை தரும் என்பதை ஸ்டாலின் புரிந்து கொண்டதை போல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் புரிந்து கொண்டால் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.