காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370 சட்டப் பிரிவை நீக்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பாஜக எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த போது மத்திய அரசு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வகையில் 370 சட்டப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்பது பாஜகவின் அஜெண்டாக்களில் ஒன்றாக இருந்தது. நீண்ட நாளாக பாஜக விரும்பி 370-வது சட்டப் பிரிவு நீக்கம் நேற்று நடந்தேறியது. காஷ்மீருக்கு வழங்கும் 370-வது சட்டப் பிரிவை நீக்கும் மசோதா மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் தாக்கல் செய்து, மசோதாவும் வெற்றி பெற்றது.


காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த 370-வது சட்டப் பிரிவு நீக்கத்தை பாஜகவினரும் சங்பரிவார் அமைப்பினரும் உற்சாகமாகக் கொண்டாடிவருகிறார்கள். பாஜகவை தனிப் பெரும்பான்மை உள்ள கட்சியாகவும், பல்வேறு மாநிலங்களில் ஆட்சி பொறுப்பில் அமர்த்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சாதனையாகவும் இதை பாஜகவினர் வர்ணிக்கிறார்கள். அதன் எதிரொலியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக எம்.பி.க்களே வைக்கத் தொடங்கியுள்ளனர்.

 
இதுதொடர்பாக மத்தியப்பிரதேச மாநிலம் ரட்லம் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டபாஜக எம்.பி. குமான் சிங் கூறுகையில், “காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர், உள்துறை அமைச்சரின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது. எவராலும் செய்ய முடியாத சாதனை இது. பல்வேறு வெளிநாடுகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு உயரிய விருதுகளை வழங்கி, அவரை கவுரவித்துள்ளன. காஷ்மீர் விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுத்துள்ள பிரதமர் மோடியைப் பாராட்டும் விதமாக நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை அவருக்கு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


குமான் சிங்கின் கருத்தை வரவேற்றுள்ள பாஜக எம்பிக்களான ரவிகிஷண், பிரக்யாசிங் தாக்கூர், விஷ்ணு தத் ஷர்மா, விஜய்குமார் துபே ஆகியோர், மோடிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர்.