சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கடந்த 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி பாரீஸ் நகரில் அன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் செயல்பட்டு வந்தது.

58 நாடுகள் இணைந்த ஐ.நா.சபையில் 48 நாடுகள் ஒத்துழைப்புடன் வாக்குகள் போடப்பட்டு சர்வதேச மனித உரிமைகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்துதான் டிசம்பர் 10-ம் தேதியை சர்வதேச மனித உரிமைகள் தினமாக ஐநா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

உலக நாடுகள் அனைத்திலும் மனித உரிமைகள் அனைத்து சூழ்நிலைகளிலும் மீட்கப்பட வேண்டும் என்பதே ஐநா-வின் குறிக்கோளாக இருந்தது. இதற்காக உலக நாடுகள் பலவற்றிலும் பிரச்சாரங்களும், விவாதங்களும், விழிப்பு உணர்வு பேரணிகளும் நடத்தப்பட்டன.

மேலும் மனித உரிமைகள் மீதான விழிப்பு உணர்வுக்காக 1966-ம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ’மனித உரிமைகள் களத்தில் சிறந்தோருக்கான ஐநா விருது’ அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது சர்வதேச மனித உரிமைகள் தினம் அங்கீகரிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்தததையடுத்து இன்று உலகம்முழுவதும் சர்வேதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், 70 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் , டிசம்பர் 10 ஆம் தேதியை மனித உரிமை தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்ததை நினைவு கூர்ந்துள்ளார்.

இந்த நாளில் தனி மனித உரிமைகளுக்கு தலை வணங்குவோம் என்றும், அனைவருக்கும் சம உரிமையும், மரியாதையையும் கொடுப்போம் என்றும் உறுதி ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தின் 70-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு புதிய தீம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #StandUp4HumanRights என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தாண்டுக்கான ஐநா மனித உரிமைகள் மையம் செயல்பட உள்ளது.

இந்தத் தீம் அடிப்படையில் சர்வதேச அளவில் மக்கள் இணைந்து ஒவ்வொரு தனி மனிதரின் சுதந்திரத்துக்காகவும் மரியாதைக்காகவும் கருணைக்காகவும் போராட வேண்டும் என ஐநா அழைப்பு விடுத்துள்ளது.