பாஜக பங்காராமௌ தொகுதி எம்.எல்.ஏ செங்கர், மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது உண்மைதான் என சிபிஐ உறுதிசெய்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குல்தீப் சிங் செங்கர்(52). இவர் கடந்த 2002ல் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சடார் தொகுதியில் நின்று, வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார்.இதையடுத்து கட்சியில் இருந்து விலகி, சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். பின்னர் 2007 மற்றும் 2012ல் பங்காராமௌ தொகுதியில் நின்று, எம்.எல்.ஏ.வானார்.

இதனைத் தொடர்ந்து 2017ல் பாஜகவில் இணைந்து, அதே பங்காராமௌ தொகுதியில் நின்று, எம்.எல்.ஏ.வானார். 

இந்நிலையில், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண், செங்கர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டினார். மேலும், இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எதுவும் எடுக்காததைக் கண்டித்து, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதைத் தொடர்ந்து, காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண்ணின் தந்தை மர்மமான முறையில் இறந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தாழ்ந்த சாதியினர் இந்த மாதிரிதான் பொய்சொல்லி பிழைப்பார்கள் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இந்த சம்பவத்தையடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து நடந்த விசாரணையில், சிபிஐ போலீசார் எம்எல்ஏ செங்கரை கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு குறித்து தெரிவித்துள்ள சிபிஐ, “பாஜக எம்எல்ஏ செங்கர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உண்மைதான். சிறுமிக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி எம்.எல்.ஏ மற்றும் அவருக்கு நெருக்கமான சிலர் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதன்பின், காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட போது, எம்எல்ஏ மற்றும் அவரது கூட்டாளிகளை வழக்கில் சேர்க்காமல் காவல்துறையினர் நாடகமாடியுள்ளனர்,” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாஜக எம்எல்ஏவின் குற்றம் நீதிமன்றத்தில் உறுதியாகும் பட்சத்தில், அவருக்கு எவ்விதமான தண்டனை வழங்கப்படும் என மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.