bjp minister blames uttar pradesh cm yogi for defeats in by election

அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் உத்தர பிரதேசத்தில், பாஜக தோல்வியடைந்ததற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் காரணம் என அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சரே கூறியிருப்பது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா உட்பட 10 மாநிலங்களில் உள்ள 4 மக்களவை, 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், உத்தரப் பிரதேசத்தில் கைரானா மக்களவை தொகுதி மற்றும் நூர்பூர் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. 

இந்த இரண்டிலுமே பாஜக தோல்வியடைந்தது. ஒட்டுமொத்தமாக இந்த இடைத்தேர்தல்களில் பாஜக படுதோல்வியை தழுவியது. 

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜக, இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்ததற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் காரணம் என அவரது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் ராஜ்பார் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜ்பார், இடைத்தேர்தல் தோல்விக்கு முதல்வர் யோகி தான் காரணம். அமைச்சரவையில் தலித் சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை அரவணைத்து சென்றாலே நமக்கு வெற்றி கிட்டும் என தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச முதல்வர் மீது பாஜக அமைச்சர் ஒருவரே பகிரங்கமாக குற்றம்சாட்டியிருப்பது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.