ஒத்த ஓட்டு பாஜக.... எள்ளி நகையாடும் எதிர்க்கட்சிகள்.... காரணம் என்ன?
தமிழ்நாட்டில் பாஜக நோட்டோவுக்கு கீழ் தான் வாக்குகளை வாங்க முடியும் என்று தொடர்ச்சியான விமர்சனம் இருந்துவரும் நிலையில், தற்போது புதிதாக ஒத்த ஒட்டு பாஜக என்ற விமர்சனமும் சேர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் பாஜக நோட்டோவுக்கு கீழ் தான் வாக்குகளை வாங்க முடியும் என்று தொடர்ச்சியான விமர்சனம் இருந்துவரும் நிலையில், தற்போது புதிதாக ஒத்த ஒட்டு பாஜக என்ற விமர்சனமும் சேர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுடன், ஏனைய மாவட்டங்களில் காலியாக இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் வெற்றிக் கொண்டாட்டங்களும், தோல்வி ஒப்பாரிக்ளும் கேட்டுக்கொண்டிருக்கிறது. கோவையில் நிகழ்ந்த சம்பவமோ தமிழ்நாடு முழுவதும் உள்ள பாஜக-வினரை கதிகலங்கச் செய்துள்ளது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குருடம்பாளையம் ஊராட்சியில் 9 ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வார்டில் ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 551 வாக்குகள் உள்ள நிலையில் தேர்தலில் 913 வாக்குகள் மட்டும் பதிவாகியிருந்தன.
இந்தநிலையில் அறிவிக்கப்பட்ட முடிவின்படி, திமுக-வை சேர்ந்த அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடியிருக்கிறார். கட்சி சார்பில்லாமல் சுயேட்சையாக போட்டியிட்ட ஜெயராஜ் 240 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். அதிமுக-வை சேர்ந்த வைத்தியலிங்கம் 196 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம்பிடித்தார்.
வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக-வை சேர்ந்த கார்த்திக்கு பெரும் சோகம் நிகழ்ந்திருக்கிறது. கார்த்தி குடும்பத்தில் 5 வாக்காளர்கள் உள்ள நிலையில் தேர்தல் முடிவில் அவருக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது. அவருக்கு ஆதரவாக, தேமுதிக-வை சேந்த ரவிக்குமார் 2 வாகுகள் பெற்றுள்ளார். ஏற்கெனவே தமிழ்நாட்டில் பாஜக நோட்டோவை மிஞ்ச முடியாது என்ற விமர்சனங்கள் இருந்துவரும் நிலையில், தற்போது ஒத்த ஓட்டு பாஜக என எதிர்க்கட்சியினர் வலைதளங்களில் எள்ளி நகையாடி வருகின்றனர்.