உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 5 முறை எம்.பி.யாக வெற்றி பெற்ற  கோரக்பூர் லோக்சபா தொகுதியில் பாஜக கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.  இதே போல் துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரியாவின்  புல்புர் லோக்சபா தொகுதியில் சமாஜ்வாதி கட்சி முன்னிலையில் உள்ளது. இதையடுத்து பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் தோல்வி முகம் குறித்து டெல்லியில் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

உ.பி.யில் முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ததால் கோராக்பூர் லோக்சபா தொகுதியும். துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரியா ராஜினாமா செய்ததால் புல்பர் லோக்சபா தொகுதிக்கும், பீஹாரில் அரேரியா லோக்சபா தொகுதி என மூன்று லோக்சபா தொகுதிகளுக்கும் பீஹாரில் ஜகனாபாத், பஹாபூவா என இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 11-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.

முதல்வர் யோகி ராஜினாமா செய்த கோரக்பூர் தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் உபேந்திர தத் சுக்லா  தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தாலும் பின்னர் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.

துணை முதலமைச்சர்  கேசவ் மவுரியா ராஜினாமா செய்த புல்புர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் போட்டியிடும் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் படேல் முன்னிலையில் உள்ளார். 

பீஹாரின் அராரியா லோக்சசபா தொகுதி மற்றும் பஹாபூவா சட்டசபை தொகுதியில் பா.ஜ., வேட்பாளர்களும், ஜெஹனாபாத் தொகுதியில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளரும் முன்னிலையில் உள்ளனர்.