ஜார்கண்டில் பாஜக தோல்வியடைந்த நிலையில் கடந்த ஓராண்டில் 5 மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழுந்துள்ளது. 


கடந்த 2013-ம் ஆண்டில் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதிலிருந்து பாஜகவின் செல்வாக்கு  எகிறியது. 2013-ல் தொடங்கி பல மாநிலங்களிலும் பாஜக அரியணை ஏறியது. டெல்லி, பீகார், கர்நாடகம் என குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே பாஜக தோல்வியடைந்தது. பின்னர் பீகாரிலும் தன்னை எதிர்த்த நிதிஷ்குமாரை கூட்டணியில் சேர்த்து பாஜக கூட்டணி ஆட்சியை மோடி - அமித்ஷா கூட்டணி ஏற்படுத்தியது. பாஜக இதுவரை வெற்றியே பெறாத அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களிலும் அரசியல் மாயாஜாலம் காட்டி பாஜக அரியணை ஏறியது.


ஆனால், கடந்த 5 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி அமைந்த மாநிலங்களில் எல்லாம் காட்சிகள் மாறத் தொடங்கியுள்ளன. 2018-ம் ஆண்டில் கர்நாடகத் தேர்தலில் பாஜக மெஜாரிட்டி பெறாதபோதும், காங்கிரஸிடமிருந்து தட்டிப் பறித்து தற்போது முழு பலத்துடன் பாஜக அரியணையில் ஏறியுள்ளது. ஆனால், பாஜக ஆதிக்கம் உள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை கடந்த ஆண்டு இழந்தது. எனவே, பாஜகவுக்கு செல்வாக்குக் குறைந்துவருவதாக எதிர்க்கட்சிகள் கூறிவந்தன. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அதையெல்லாம் தாண்டி மோடி மாயாஜாலம் நிகழ்த்தினார். 


மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடந்த தேர்தலில் மகாராஷ்டிராவில் கூட்டணி மாறியதால் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. ஹரியாணாவில் பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. எனினும் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சி அமைத்தது. ஆனால், அங்கே காங்கிரஸ் கடும் போட்டியைம் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது ஜார்கண்டில் பாஜக ஆட்சியை இழந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் பாஜக ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்துள்ளது. இந்த மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சி தனியாகவோ கூட்டணியோகவோ ஆட்சிக்கு வந்துள்ளது.


 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி காட்டிய மாயாஜாலம் தற்போது என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் வெவ்வேறு மாதிரி மக்கள் வாக்களிக்கிறார்களா என்ற கேள்வியையும் அது முன்வைத்துள்ளது. விரைவில் டெல்லி, பீகார் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான விடை கிடைக்கும் என்று நம்பலாம்.