தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி என அக்கட்சியின் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார்.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த வி.பி துரைசாமி கடந்த சில மாதத்திற்கு முன் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இவர் இணைந்த பிறகு அதிருப்தியில் உள்ள திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பாஜகவில் இணைவார்கள் என்று செய்திகள் வெளியானது. அவர் கூறியபடி அண்மையில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் டெல்லியில் உள்ள பாஜக தலைவரை சந்தித்து திமுகவிற்கு அதிர்ச்சி ஏற்படுத்தினர். இதனால் கு.க செல்வம் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், சில திமுக நிர்வாகிகள் பாஜகவில் இணைவார்கள் என்று கூறிவருகிறார். 

இந்நிலையில், தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வி.பி.துரைசாமி;- இடஒதுக்கீடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இட ஒதுக்கீட்டில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து மக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. கனிமொழியை இந்தியரா என கேட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. என்னை பொறுத்தவரை அதுபோன்ற நிகழ்வு நடைபெறவில்லை. முறையாக விசாரித்தால் உண்மை தெரியும். 

மேலும், பேசிய அவர் நேற்று வரை அதிமுக vs திமுக என இருந்த நிலை தற்போது திமுக  vs பாஜக என மாறியுள்ளது என்றார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி அமையும். மத்தியில் ஆட்சியில் இருப்பதால் பாஜக தலைமையில் தான் சட்டப்பேரவை கூட்டணி அமையும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

பாஜகவை எந்த கட்சி அனுசரித்து செல்கிறதோ அவர்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என வி.பி.துரைசாமி கூறியுள்ளார். அதிமுக தலைமையில் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்ட நிலையில் வி.பி.துரைசாமி கருத்து சலசலப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.